திருப்புகழ்க் கதைகள் 259
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியம் –
முதிர உழையை – பழநி
இத்திருப்புகழில் அடிமை புகுத்தி விடுமாய மனதை உடைய அசட்டு மனிதன் என்ற வரியில் மனமானது நன்மைக்கும் தீமைக்கும் துணையாக நிற்கும் இயல்புடைய ஒரு கரைப்பான் போன்றது. எடுத்துக்காட்டாக, தண்ணீரில் கற்கண்டையுங் கரைக்கலாம்; நஞ்சையுங் கரைக்கலாம்.
அது போலவே மாயத்தைப் புரியும் இம் மனம் அருணகிரியாரை இறைவனுக்கு அடிமைப்படாமல் பொதுமகளிருக்கு அடிமைப்பட வைத்துவிட்டது. கீழ்மனம் படைத்தபடியால் அசட்டு மனிதனாகி விட்டான். நன்மனம் படைத்தால் மனிதரில் தெய்வமாக விளங்கலாம். இங்கே ஒரு திரைப்படத்தில் வரும் பாடல் வரியை நினைவுகூரலாம்.
மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்
துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவில் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் தெய்வம் ஆகலாம்
இத்திருப்புகழில் அருணகிரியார் முழுப் புரட்டன் பற்றியும் பேசுகிறார். எந்த ஒரு நல்ல செயலையும் புரட்டிப் பேசுவது சிலருக்குச் சொந்த சொத்தாக இருக்கும். ஒரு தவறைத் தான் செய்துவிட்டு, பிறர் செய்ததாகப் பேசுவர். ஒரு புண்ணியவான் அன்னதானம் புரிகின்றான். வறியவரது பசியாற்றுவது சிறந்த அறம். தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல் என பாரதியார் கூரியிருக்கிறார். இந்த நல்லறச் செயலைக்கண்டு “இது சோம்பேறிக் கூட்டங்களை வளர்ப்பதாகும். அன்னம் போடுவதால் இவர்கள் சோம்பேறிகளாகக் கெட்டுவிடுகின்றார்கள். ஆதலால் இது அறமன்று” என்று புரட்சியாகப் பேசுவார்கள். இவ்வாறு புரட்டுகின்றவன் புரட்டன். இதில் கால் புரட்டன்; அரைப் புரட்டன்; முக்கால் புரட்டன் என்றும் உண்டு. அடியோடு புரட்டுகின்றவன் முழுப் புரட்டன்.
அருணகிரியார் சதுரன் யார் என்பதைப் பற்றியும் பேசுகிறார். சதுர்-சாமர்த்தியம். சாமம், தானம், பேதம், தண்டம் என்ற நான்கு உபாயங்களிலும் சாமர்த்தியம் உடையவன் சதுரன். இங்கே இவ்வனைத்திலும் வல்லவரான திருமாலை, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைச் சதுரன் எனக் குறிப்பிடுகிறார். வரையை எடுத்த நிருதன் என்ற சொற்களின் மூலம் இராவனன் கைலாய மலையைத் தூக்கிய கதையைச் சொல்லுகிறார்.
இராவணன் தன் தோள் வலியால் தருக்குற்று நின்றபோது நந்தியம்பெருமான் அவனுக்குப் போதனை செய்கிறார். அப்போது இராவணன் சீறி, “குரங்குபோல் முகம் வைத்திருக்கின்ற நீ எனக்கு அறிவுரை பகிர்கின்றனையோ?” என்றான். திருநந்திதேவர் சிறுநகை செய்து, “திறங்கெட்ட தீயவனே, குரங்கினால் உன் நாடும் நகரும் அழிந்து உனக்குத் தோல்வி எய்தக் கடவது” என்று சபித்தருளினார்.
இதை வீடணன் இராவணனிடம் கூறும் கம்பராமாயணப் பாடலாலும் அறியலாம்.
மேல்உயர் கயிலையை வென்ற மேலைநாள்
நாலுதோள் நந்திதான் நவின்ற சாபத்தால்,
கூலவான் குரங்கினால் குறுகும் கோளது
வாலிபாறல் கண்டனம் வரம்பில் ஆற்றலாய்.
அருணகிரியார் இத்திருப்புகழில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சிறு குழந்தையாய் யசோதையிடம் வளர்ந்த போது சகடாசுரனை வதைத்த கதையையும், மருத மரங்களாய் நின்ற நளகூபரன், மணிக்ரீவன் ஆகிய இரு கந்தர்வர்களுக்குச் சாப விமோசனம் தந்ததையும் சகடு மருத முதைத்த தழையு மரமு நிலத்தில் மடிய என்ற வரிகளில் பாடியருளியுள்ளார்.