ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பை 2011-
இந்தியா வென்றது

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி மும்பையின் வான்கேடே மைதானத்தில் 2 ஏப்ரல் 2011 அன்று இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு அணிகளும் தமது இரண்டாவது உலகக் கோப்பை வெற்றிக்காகப் போட்டியிட்டன; இலங்கை கடைசியாக 1996ஆம் ஆண்டிலும் இந்திய அணி 1983ஆம் ஆண்டிலும் வென்றன.
இறுதிப் போட்டியை நோக்கிய பயணம்
குரூப் A பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் இலங்கை நாக் அவுட்டுக்கு தகுதி பெற்றது. குரூப் ஆட்டங்களில் ஆறு ஆட்டங்களில் நான்கில் வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிராகத் தோல்வியடைந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தோல்வியைச் சந்தித்தது. ஆஸ்திரேலியாவுடன் புள்ளிகள் சமநிலையில் இருந்ததால், நிகர ரன் ரேட் காரணமாக குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
B பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா, தென்னாப்பிரிக்காவை அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அவர்கள் தங்கள் ஆறு ஆட்டங்களில் நான்கில் வெற்றிகளைப் பெற்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தோல்வியடைந்தனர், அதே நேரத்தில் இங்கிலாந்துக்கு எதிரான அவர்களின் ஆட்டம் அதிக ஸ்கோரிங் ஆட்டமாக இருந்தபோதிலும் டையாக முடிந்தது.
காலிறுதியில் இங்கிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இலங்கை அணி, துல்லியமாக இங்கிலாந்தை வீழ்த்தியது. இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களான திலகரத்ன தில்ஷான் மற்றும் உபுல் தரங்கா இருவரும் ஆட்டமிழக்காமல் சதம் அடித்து உலகக் கோப்பையில் முதல் விக்கெட்டுக்கு உலக சாதனை நிலைப்பாட்டை உருவாக்கினர். அரையிறுதியில் நியூசிலாந்துடன் மிகவும் ஆர்வத்துடன் போட்டியிட்டது; ஆனால் எளிதாக வென்றது. இந்தப் போட்டிகள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவின் திறமையான, வழக்கத்திற்கு மாறான பந்துவீச்சு, கட்டுப்பாடான பீல்டிங் மற்றும் இலங்கை டாப் ஆர்டரின் பேட்டிங் திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தியது.
இந்தியாவின் இரண்டு நாக் அவுட் போட்டிகளும் பரபரப்பான போட்டிகளாக இருந்தன. காலிறுதியில் ஆஸ்திரேலியாவைச் சந்தித்தது. ஆஸ்திரேலியா ஒரு வலுவான அணி; நடப்பு சாம்பியன்கள் வேறு. ஆஸ்திரேலியாவை 260 ரன்களுக்கு இந்தியா கட்டுப்படுத்தியது. இதற்கு இந்தியா மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பின்னர் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த போதிலும் இலக்கை வெற்றிகரமாக எட்டியது. அரையிறுதி ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் சந்தித்தன; வரலாற்று ரீதியாக இந்த இரு அணியும் போட்டியாளர்கள்; மேலும் இரு நாட்டு பிரதமர்கள் இப்போட்டியைப் பார்க்க வந்தனர். முதலில் பேட்டிங் செய்த இந்தியா, இறுதியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இப்போட்டிக்கு முன்னர், இந்தியாவும் இலங்கையும் உலகக் கோப்பை வரலாற்றில் ஆறு முறை ஒன்றையொன்று எதிர்த்து விளையாடியிருந்தன. இலங்கை அணி நான்கிலும், இந்திய அணி இரண்டிலும் வென்றிருந்தன. இலங்கையை எதிர்த்து விளையாடிய ஒருநாள் போட்டிகளில் இந்தியா 67 வெற்றிகளையும், 50 தோல்விகளையும் பெற்றிருந்தது. 11 போட்டிகள் வெற்றி தோல்வியின்று முடிவடைந்தது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்பது இது மூன்றாம் முறையாகும். இந்தியா 1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வென்றது; 2003ஆம் ஆண்டுப் போட்டியில் தோல்வி அடைந்தது. இலங்கை 1996 போட்டியில் வென்றும், 2007 போட்டியில் தோல்வியும் அடைந்தது. 1996 போட்டியில் துடுப்பாட்ட வரலாற்றில் உலக சாதனைகள் நடத்தியுள்ள சச்சின் டெண்டுல்கர், முத்தையா முரளிதரன் இருவருக்கும் இதுவே கடைசி உலகக்கிண்ணப் போட்டியாக இருந்தது.
இலங்கை அணியின் தலைவர் சங்கக்கார டாசில் வென்று முதலில் மட்டையாடத் தீர்மானித்தார். சாகிர் கானின் சீரிய பந்துவீச்சையடுத்து இலங்கை அணி துவக்கத்தில் மெதுவாக ஆடியது. தனது முதல் மூன்று ஓவர்களில் ஒரு ரன் கூடக் கொடுக்காது தனது ஐந்து ஓவர்களில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்த சாகிர் உபுல் தரங்கவின் விக்கட்டையும் கைப்பற்றினார். ஆனால் மற்ற முனையில் காயமடைந்த ஆசீஷ் நேராவிற்கு மாற்றாக வந்திருந்த ஸ்ரீசாந்த் தனது எட்டு ஓவர்களில் 52 ரன்கள் கொடுத்தார். இலங்கை 17வது ஓவர் முடிவில் 60/2 என்ற நிலையில் மகெல ஜயவர்தன ஆடப் புகுந்தார். 88 பந்துகளில் 103* ஓட்டங்கள் எடுத்து அணிக்குப் புத்துயிர் ஊட்டினார். இவருடன் இணைந்து நன்றாக அடித்து ஆடிய நுவன் குலசேகர மற்றும் திசாரா பெரேரா உதவியுடன் இலங்கை அணி தனது ஆட்ட முடிவில் 274/6 எடுத்தது.
இதற்கு எதிராக ஆடத்துவங்கிய இந்திய அணி துவக்கத்திலேயே சேவாக் மற்றும் சச்சினை இழந்து 31/2 என்ற நிலையை அடைந்தது. விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இணைந்து ஆட்டத்தை நிலைப்படுத்துமாறு ஆடி வந்தவேளையில் அணியின் ரன்கள் 114 ஆக இருந்தபோது கோலி, திலகரத்ன டில்சான் பந்துவீச்சில் பந்துவீச்சாளருக்கே காட்ச் கொடுத்து வெளியேறினார். இந்நிலையில் களமிறங்கிய அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி கம்பீருடன் இணைந்து நான்காவது இலக்குக்கிற்கு 109 ரன்கள் சேர்த்து அணியை நல்ல நிலைக்கு முன்னேற்றினார். கம்பீர் 97 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறியபோது களமிறங்கிய யுவராஜ் சிங்குடன் இணைந்து ஆடிய தோனி 79 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து இந்திய வெற்றிக்கு வழிகோலினார். தோனி நுவன் குலசேகரவின் பந்தை களத்திற்கு வெளியே அடித்து ஆறு ஓட்டங்கள் பெற இந்தியா வெற்றி இலக்கை எட்டி உலகக் கோப்பையை வென்றது.
சாதனைகள்
எட்டு ஓவர்களில் 39 ரன் கொடுத்த முரளிதரனுக்கு இதுவே கடைசி ஒருநாள் போட்டியாகும். இவரது முதல் மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தியாவுடனேயே நிகழ்ந்தன. இலங்கையின் மகெல ஜயவர்தன உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஒன்றில் நூறு ஓட்டங்கள் எடுத்த ஆறாவது பேட்ஸ்மென் ஆவார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய அணிகளில் தோற்ற அணியில் நூறு அடித்த முதல் துடுப்பாட்டக்காரரும் அவரே. இதற்கு முன்னர் கிளைவ் லொயிட், விவியன் ரிச்சர்ட்ஸ், அரவிந்த டி சில்வா, ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் வெற்றிபெற்ற அணிகளில் நூறு அடித்துள்ளனர்.
ஆசிய நாடுகள் மட்டுமே பங்கேற்ற முதல் உலக கோப்பை இறுதி ஆட்டமாக இது அமைந்திருந்தது. 1992ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஒரு ஆசிய நாடாவது பங்கேற்கும் ஆறாவது இறுதிப்போட்டியாகவும் இது அமைந்தது. 2007ஆம் ஆண்டும் இறுதிப்போட்டியில் பங்கேற்ற இலங்கை அணிக்கு இது தொடர்ச்சியான இரண்டாவது முறையாகும். இந்தியா, இலங்கை இருவருக்குமே இறுதிப்போட்டியில் இது மூன்றாவது முறையாகும்.
ஓர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மிக உயர்ந்த இலக்கினை எட்ட முயன்ற முயற்சியாக இந்தியாவின் 275 ஓட்ட இலக்கு அமைந்திருந்தது. இறுதிப்போட்டியில் இரண்டாவதாக ஆடிய அணி வெல்வது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னர் இலங்கை 1996ஆம் ஆண்டும் ஆத்திரேலியா 1999ஆம் ஆண்டும் இவ்வாறு வென்றுள்ளன. உலகக் கோப்பையை ஒருமுறைக்கும் மேலாக வென்ற நாடாக இந்தியா தன்னை மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியாவுடன் இணைத்துக் கொண்டது.
உலகக் கோப்பை வரலாற்றிலேயே இரண்டாம் முறையாக ஓர் போட்டி நடத்தும் நாடு கோப்பையை வென்றுள்ளது. போட்டி நடத்தும் நாடுகளில் ஒன்றாக இருந்த இலங்கை 1996ஆம் ஆண்டு இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது. இருப்பினும் போட்டி நடத்தும் நாடொன்று தன் நாட்டிலேயே அந்த வெற்றியைப் பெற்றது இதுவே முதல்முறையாகும்