
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் தூண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்த, பாமக., முன்னாள் நகரச் செயலாளரான ராமலிங்கம் (45) கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி இரவு அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அந்தப் பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் மதமாற்றத்தில் ஈடுபட்டதைக் கண்டித்து, அவர் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், அவர் கொலை செய்யப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்தக் கொலை தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிந்து பலரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்குதேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ.,) மாற்றப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் சார்ந்த எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இன்று மீண்டும் என்ஐஏ., அதிகாரிகள் சோதனையை தொடங்கி உள்ளனர். திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், நெல்லை உள்ளட்ட 9 மாவட்டங்களில் சோதனை நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள எஸ்டிபிஐ., கட்சித் தலைவர் முபாரக் வீடு உட்பட தமிழகம் முழுவுதும் 24 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ.,) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரிழந்தூர் பட்டகால் தெருவில் வசிக்கும் முகமது ரபிக் மகன் நிஷார் அகமது.48. என்பவரது வீட்டிற்கு 5 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை நடராஜபுரம் தெற்கு காலனியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த அக்ரூதீன், கும்பகோணத்தை சேர்ந்த அப்துல் மஜீத், ராஜகிரி பகுதியை சேர்ந்த முகமது பாரூக், திருபுவனம் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா ஆகியோர் வீடுகளில் என்ஐஏ சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் சுமார் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.
கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள இப்ராஹிம் ராவுத்தர் வீதியில் பிஎப்ஐ அமைப்பின் முன்னாள் நிர்வாகி அப்பாஸ் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்(என்.ஐ.ஏ) சோதனை மேற்கொண்டனர்.