- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஐபிஎல் 2024 – 29.03.2024 – பெங்களூரு
ராயல் சேலஞ்சர்ஸ் vs கொல்கொத்த நைட் ரைடர்ஸ்
பெங்களூரு அணியை (182/6, விராட் கோலி 83*, கிரீன் 33, மேக்ஸ்வெல் 28, தினேஷ் கார்த்திக் 20, ஹர்ஷித் ராணா 2/39, ரசல் 2/29) கொல்கொத்தா அணி (வெங்கடேஷ் ஐயர் 50, சுனில் நரேன் 47, ஷ்ரேயாஸ் ஐயர் 39*, பில் சால்ட் 30, ) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் கொல்கொத்த நைட் ரைடர்ஸ் அணிக்கும் பெங்களூருவில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற கொல்கொத்தா அணி முதலில் பந்து வீசத்தீர்மானித்தது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர் கிங் கோலி அபாரமாக ஆடினார். அவர் 59 பந்துகளில் 83 ரன் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 4 ஃபோர் மற்றும் 4 சிக்சர் அடித்தார்.
மற்றொரு தொடக்க வீரர் பிளேசிஸ் இந்த ஆட்டத்திலு சோபிக்கவில்லை. காமரூன் கிரீன் (21 பந்துகளில் 33 ரன்) மற்றும் கிளன் மேக்ஸ்வெல் (19 பந்துகளில் 28 ரன்) நிலைத்து ஆடவில்லை. ரஜத் படிதர் (3 ரன்) அனுஜ் ராவத் (3 ரன்) இருவரும் ஏமாற்றினார்கள். ஏறத்தாழ விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தினேஷ் கார்த்திக் 8 ஓந்துகளில் 20 ரன் அடித்தார். அதில் 3 சிக்சர்களும் அடங்கும். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது.
இரண்டாவதாக ஆட வந்த கொல்கொத்தா அணியின் பேட்டிங் ஆரம்பத்திலிருந்தே அதகளமாக இருந்தது. 22 பந்துகளில் 2 ஃபோர், 5 சிக்சர்களுடன் 47 ரன் அடித்த சுனில் நரேன் முதலில் அவுட்டானார். அதன் பின்னர் உடனேயே சால்ட் (20 பந்துகளில் 30 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) ஆட்டமிழந்தார்.
உண்மையில் கொல்கொத்தா அணியின் முதல் ஆறு ஓவர்களில் அந்த அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. அந்த அணி முதல் ஆறு ஓவரில் விக்கட் இழப்பின்றி 85 ரன் எடுத்தது. ரன்ரேட் 14.16; தேவயான ரன்ரேட் 7.0; அதாவது மீதமுள்ள 84 பந்துகளில் 98 ரன் எடுக்கவேண்டும்.
இவர்களுக்குப் பதிலாக ஆடவந்த வெங்கடேஷ் ஐயரும் (30 பந்துகளில் 50 ரன், 3ஃபோர், 4 சிக்சர்) ஷ்ரேயாஸ் ஐயரும் (24 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) அவர்கள் விட்ட இடத்திலிருந்து அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதனால் கொல்கொத்தா அணி 16.5 ஓவரில் இலக்கை எளிதாக எட்டினர். பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் மைதானத்தின் தன்மை அறிந்து அதற்குத் தகுந்தார்போல பந்துவீசவில்லை.
கொல்கொத்தா அணியின் சுனில் நரேன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை லக்னோவில் பஞ்சாப் அணிக்கும் லக்னோ அணிக்கும் இடையில் ஆட்டம் நடைபெற உள்ளது.