இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட்-மெல்பர்ன்-டிசம்பர் 26 முதல் 29 வரை
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸ் (122.4 ஓவர்களில் 474 ரன், ஸ்டீவன் ஸ்மித் 140, லபுசேன் 72, சாம் கொன்ஸ்டாஸ் 60, உஸ்மான் க்வாஜா 57, பாட் கம்மின்ஸ் 49, பும்ரா 4/99, ஜதேஜா 3/78, ஆகாஷ் தீப் 2/94, சுந்தர் 1/49) இரண்டாவது இன்னிங்க்ஸ் (82 ஓவர்களில் 228/9, லபுசேன் 70, பாட் கம்மின்ஸ் 41, பும்ரா 4/56, சிராஜ் 3/66, ஜதேஜா 1/33) இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் (119.3 ஓவர்களில் 369 ரன், நிதீஷ் குமார் ரெட்டி 114, வாஷிங்க்டன் சுந்தர் 50, விராட் கோலி 36, ரிஷப் பந்த் 24, கே.எல். ராகுல் 24, பாட் கம்மின்ஸ் 3/89, ஸ்காட் போலண்ட் 3/57, நாதன் லியான் 3/96). ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்னும் ஐந்தாம் நாள் ஆட்டம் மீதமுள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தில் ஐந்தாவது நாளுக்குள் நுழைய இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு ஸ்மித் 140 ரன்கள் எடுக்க அந்த அணி 474 ரன்கள் குவித்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிக்கு நிதீஷ் குமார் ரெட்டி 114 ரன்கள் குவித்தார்.
பும்ராவின் மேஜிக் பந்துவீச்சு
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாட வந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணிக்கு இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் முகமது சிராஜ் இருவரும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்தார்கள். இருவரும் சேர்ந்து ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 91 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகள் என்ற நிலைக்குத் தள்ளினார்கள். ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கான்ஸ்டாஸ் 8, கவாஜா 21, ஸ்மித் 13, ஹெட் 1, மிட்சல் மார்ஸ் 0, அலெக்ஸ் கேரி 2 என வரிசையாக வெளியேற ஆஸ்திரேலியா அணி பெரிய நெருக்கடியில் சிக்கியது. இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் டே டெஸ்டில் வெல்வதற்கான வாய்ப்புகள் உருவானது.
லபுசேன் கம்மின்ஸ் இருவரின் நல்ல ஆட்டம்
ஆஸ்திரேலிய அணிக்கு கடினமான நேரத்தில் மூன்றாவது இடத்தில் வந்த லபுசேன் சிறப்பாக விளையாடி 70 ரன்கள் எடுத்தார். இவருடன் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து விளையாடிய கேப்டன் கம்மின்ஸ் 41 ரன்கள் எடுத்தார். இன்னொரு முனையில் கடைசி விக்கெட்டுக்கு பிரச்சனையை தந்த லயன் ஆட்டம் இழக்காமல் 41 ரன்கள் எடுத்திருக்கிறார். அவருடன் போலன்ட் 10 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.
இவர்கள் இருவரும் கடைசி விக்கட்டுக்கு 110 பந்துகள் சந்தித்து ஆட்டம் இழக்காமல் 55 ரன் பாட்னர்ஷிப் அமைத்திருக்கிறார்கள். இன்றைய நான்காவது நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் 333 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்திய அணி தங்களுக்கு கிடைத்த இரண்டு வாய்ப்பை பந்துவீச்சில் தவறவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பும்ரா 4, சிராஜ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.
ரோஹித் ஷர்மா
இந்தப் போட்டியிலும் ரோஹித் ஷர்மா பேட்டிங்கில் சொதப்பினார்; சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஃபீல்டிலும் பந்து வீச்சு, ஃபீலிடிங்க் அமைப்பு ஆகியவற்றில் தவறுகள் செய்தார். அடுத்த ஆட்டத்தில் அவர் இருப்பாரா என்பது சந்தேகத்தில் உள்ளது. இந்த ஆட்டத்திலேயே விராட் கோலி ஃபீல்டிங்கை மாற்றியமைத்ததை பல முறை பார்க்க முடிந்தது.
நிதீஷ் குமார் ரெட்டி
நிதீஷ் குமார் ரெட்டியினால் அணியின் சமத்தன்மை கெடுகின்றது என சஞ்சய் மஞ்ச்ரேகர் இந்த டெஸ்ட் தொடங்குவதற்கு முன்னர் கூறினார். ஆனால் நிதீஷும் சுந்தரும் ஒரு டெஸ்ட் மேட்சை எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு மற்றவர்களுக்குப் பாடம் எடுத்தனர். நிதீஷ் சதம் அடிப்பதற்கு முன்னர் சுந்தர் ஆட்டமிழந்துவிட்டார். அந்த ஓவரில் மூன்று பந்துகள் மீதமிருந்தன. அந்த மூன்று பந்துகளையும் சிராஜ் தடுத்து ஆடியது ஆட்டத்தின் டென்ஷன் மிகுந்த மூன்று பந்துகள். அடுத்த ஓவரில் நிதீஷ் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
ஆட்டம் என்ன ஆகும்?
தற்போதைய நிலையில் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நாளை அவர்கள் இன்னமும் 17 ரன்கள் சேர்ப்பார்கள் என நம்புவோம். அப்பொது 350 ரன் கள் என்பது வெற்றி இலக்கு. டெஸ்டில் ஒருநாளில் (அவர்கள் ஆடியது போக மீதமுள்ள நேரத்தில்) 350 ரன் அடிப்பது என்பது மிகக் கடினம். அதுவும் இந்திய மட்டையாளர்களின் ஃபார்மை வைத்துப் பார்க்கும் போது ட்ரா செய்வதே கடினம்.
ஒரு அருமையான் ஐந்தாம் நாள் ஆட்டம் காத்திருக்கிறது.