
ஐ.பி.எல் 2025 – குஜராத் vs ராஜஸ்தான் –ஜெய்பூர் – 28.04.2025 –
வைபவ் சூர்யவன்ஷியின் தாம்தூம் ஆட்டம்
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
குஜராத் டைடன்ஸ் அணியை (209/4, ஷுப்மன் கில் 84, ஜாஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 50, சாய் சுதர்ஷன் 39, தீக்ஷணா 2/35, ஆர்ச்சர் 1/49, சந்தீப் ஷர்மா 1/33) ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (15.5 ஓவர்களில் 212/2, வைபவ் சூர்யவன்ஷி 101, ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 70, ரியன் பராக் 32, பிரசித் கிருஷ்ணா 1/47, ரஷீத் கான் 1/24) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் குஜராத் அணி முதலில் மட்டையாட வந்தது. அதன் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (30 பந்துகளில் 39 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ஷுப்மன் கில் (50 பந்துகளில் 84 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர். சாய் சுதர்ஷன் 11ஆவது ஓவரில் ஆட்டமிழந்தபோது ஆடவந்த ஜாஸ் பட்லரும் (26 பந்துகளில் 50 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) அதிரடியாக ஆடினார். இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கட் இழப்பிற்கு 209 ரன் எடுத்தது.
210 என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர், இள வயதுடைய வைபவ் சூர்யவன்ஷி (38 பந்துகளில் 101 ரன், 7 ஃபோர், 11 சிக்சர்) மற்றும் யசஶ்வீ ஜெய்ஸ்வால் 940 பந்துகளில் 70 ரன், 9 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் குஜராத் பந்துவீச்சாளர்களின் பந்துகளை துவைத்து எடுத்தனர்.
வைபவ் சூர்யவன்ஷி 12ஆவது ஓவரில் ஆட்டமிழக்கும்போது ராஜஸ்தான் அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. மீதம் பெறவேண்டிய ரன்களை ஜெய்ஸ்வாலுடன் இணைந்து ரியன் பராக் (15 பந்துகளில் 32 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) பெற்றார். இதனால் 15.5 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 212 ரன் எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது.
ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அவர் இன்று 17 பந்துகளில் 50 ரன்னும் அடுத்த 18 பந்துகளில் சதமும் அடித்தார். இது டி20 ஆட்டத்தில் அடிக்கப்பட்ட இரண்டாவது வேகமான சதமாகும்.
முதலிடத்தில் இருப்பவர் 30 பந்துகளில் சதமடித்த கிறிஸ் கெயில் ஆகும். டி20 ஆட்டங்களில் மிகவும் இளவயதில் சதிமடித்தவர் என்ற சாதனையையும் வைபவ் சூர்யவன்ஷி செய்தார்.





