
ஐ.பி.எல் 2025 – 18.05.2025
– இரண்டு ஆட்டங்கள்
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பஞ்சாப் vs ராஜஸ்தான் – ஜெய்ப்பூர்
பஞ்சாப் கிங்க்ஸ் அணி (219/5, நெஹல் வதேரா 70, ஷஷாங்க் சிங் 59, ஷ்ரேயாஸ் ஐயர் 30, பிரப்சிம்ரன் சிங் 21, அஸ்மத்துல்லா ஒமர்சாய் 21, துஷார் தேஷ்பாண்டே 2/37, வெனா மபாகா, ரியன் பராக், ஆகாஷ் மத்வால் தலா ஒரு விக்கட்), ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (209/7, துருவ் ஜுரல் 53, யசஷ்வீ ஜெய்ஸ்வால் 50, வைபவ் சூர்யவன்ஷி 40, சஞ்சு சாம்சன் 20, ஹர்ப்ரீத் ப்ரார் 3/22, மார்கோ ஜேன்சன் 2/41, ஒமர்சாய் 2/44) 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அதன் தொடக்க வீரர்களில் ஒருவரான பிரியான்ஷ் ஆர்யா (9 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் மூன்றாவதாகக் களமிறங்கிய மிட்சல் ஓவன் (பூஜ்யம் ரன்) ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் பிரப் சிம்ரன் சிங் (10 பந்துகளில் 21 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) நாலாவது ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். மிக மோசமான நிலையில் இருந்த பஞ்சாப் அணியின் ஸ்கோரை நெஹல் வதேரா (37 பந்துகளில் 70 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்), ஷ்ரேயாஸ் ஐயர் (25 பந்துகளில் 30 ரன், 5 ஃபோர்) மற்றும் ஷஷாங்க் சிங்-உடன் (30 பந்துகளில் 59 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) இணைந்து நல்ல நிலைக்கு உயர்த்தினார். இறுதியில் விளையாட வந்த அஸ்மத்துல்லா ஓமர்சாய் (9 பந்துகளில் 21 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) சிறப்பாக ஆடியதால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 219 ரன் எடுத்தது.
220 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆட ஆரம்பித்தா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்தில் வெகு வேகமாக ரன் சேர்த்தது. பின்னர் சுணக்கம் ஏற்பட்டு 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது. 16ஆவது ஓவர் முடிவில் வெற்றிக்கு 55 ரன்கள் தேவைப்பட்டது. துருவ் ஜுரல் (31 பந்துகளில் 53 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் ஷிம்ரன் ஹெட்மயர் (11 ரன்) இருவரும் ஆடிக்கொண்டிருந்தார்கள். 20ஆவது ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டன். ஆனால் அதுவரை நன்றாக ஆடிக்கொண்டிருந்த துருவ ஜுரல் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் வனிந்து ஹசரங்கா ஆட்டமிழந்தார். அடுத்த மூன்று பந்துகளில் 20 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை. ஆனால் அந்த 20 ரன்களை ராஜஸ்தான் அணி அடிக்க முடியவில்லை. அதனால் அந்த அணி தோல்வியைத் தழுவியது.
மூன்று விக்கட்டுகள் எடுத்த பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் ஹர்ப்ரீத் ப்ரார் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
டெல்லி vs குஜராத்
டெல்லி கேபிடல்ஸ் அணியை (199/3, கே.எல் ராகுல் 112, அபிஷேக் போரல் 30, அக்சர் படேல் 25, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 21, அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா ஒரு விக்கட்), குஜராத் டைடன்ஸ் அணி (205/0, சாய் சுதர்ஷன் ஆட்டமிழக்காமல் 108, ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 93) 10 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாடவந்த டெல்லி அணிக்கு கே.எல். ராகுல் இன்று தொடக்கவீரராகக் களமிறங்கினார். ஆனால் மற்றொரு தொடக்க வீர டியூ பிளேசிஸ் (5 ரன்) நாலாவது ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் ராகுல் (65 பந்துகளில் 112 ரன், 14 ஃபோர், 4 சிக்சர்) கடைசி வரை ஆட்டமிழக்காமல் அபிஷேக் போரல் (19 பந்துகளில் 30 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), அக்சர் படேல் (16 பந்துகளில் 25 ரன், 2 ஃபோர் 1 சிக்சர்) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (10 பந்துகளில் 21 ரன், 2 சிக்சர்) ஆகியோருடன் இணைந்து அணி யின் ஸ்கோரை 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கட் இழப்பிற்கு 199 ரன் என்ற நிலைக்குக் கொண்டுவந்தார்.
200 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவதாகக் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (61 பந்துகளில் 108 ரன், 12 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் ஷுப்மன் கில் (53 பந்துகளில் 93 ரன், 3 ஃபோர், 7 சிக்சர்) இந்த ஐபிஎல் சீசனில் வெற்றிகரமான தொடக்க வீரர் ஜோடி ஆகும். இவர்கள் இருவரும் 19 ஓவர்களில் 205 ரன் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.
குஜராத் அணியின் சாய் சுதர்ஷன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
புள்ளிப் பட்டியலில் தற்போது முதல் மூன்று இடங்களில் உள்ள குஜராத் (18), பெங்களூரு (17), பஞ்சாப் (17) ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன. நாலாவ்து இடத்திற்கு வரப்போகும் அணி எது என்பது மீதமுள்ள ஆட்டங்களில் முடிவாகும்.






