
ஐபிஎல் 2025 – தகுதி ஆட்டம் 1 – 29.05.2025 – முல்லன்பூர் – பஞ்சாப் vs பெங்களூரு
பெங்களூரு அபார வெற்றி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பஞ்சாப் கிங்க்ஸ் அணியை (14.1 ஓவர்களில் 101, மார்கஸ் ஸ்டோயினிஸ் 26, ஒமர்சாய் 18, பிர்சிம்ரன் சிங் 18, ஹேசல் வுட் 3/21, சுயேஷ் ஷர்மா 3/17, யஷ் தயாள் 2/26, புவனேஷ் குமார், ஷெப்பர்ட் தலா ஒரு விக்கட்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (10 ஓவர்களில் 106/2, பில் சால்ட் 56, மாயங்க் அகர்வால் 19, ரஜத் படிதர் 15, கோலி 12, ஜேமியான், முஷீர் கான் தலா ஒரு விக்கட்) 60 பந்துகள் மீதமிருக்க, 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த பஞ்சாப் அணியின் வீரர்களில் மார்கஸ் ஸ்டோயினிஸ் (17 பந்துகளில் 26 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்)), பிரப்சிம்ரன் சிங் (10 பந்துகளில் 18 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), மற்றும் அஸ்மத்துல்லா ஒமர்சாய் (12 பந்துகளில் 18 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) மட்டுமே இரட்டை இலக்க ரன் சேர்த்தனர். மற்ற வீரர்களான பிரியான்ஷ் ஆர்யா (7 ரன்), ஜோஷ் இங்கிலீஷ் (4 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (2 ரன்), நெஹல் வதேரா (8 ரன்), ஷஷாங்க் சிங் (3 ரன்), முஷீர் கான் (பூஜ்யம் ரன்), ஹர்பிரீத் ப்ரார் (4 ரன்) என் அனைவருமே பெங்களூரு பந்துவீச்சாளர்களின் பந்துகளை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.
102 ரன் என்ற மிக எளிய இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் விராட் கோலி (12 பந்துகளில் 12 ரன், 2 ஃபோர்) நாலாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரை அடுத்து களமிறங்கிய மாயங்க் அகர்வால் (13 பந்துகளில் 19 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ரஜத் படிதர் (8 பந்துகளில் 15 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் பெரிய இன்னிங்க்ஸ் ஆடவில்லை எனினும் மற்றொரு தொடக்க வீரரான பில் சால்ட் (27 பந்துகளில் 56 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்) உடன் இணைந்து ஆடி 10 ஓவர்களில் அணியை வெற்றி இலக்கை அடையவைத்தனர்.
பெங்களூரு அணியின் சுழப் பந்துவீச்சாளர் சுயேஷ் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி நேரடியாக இறுதி ஆட்டத்திற்குச் செல்கிறது. பஞ்சாப் அணிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. 60 பந்துகள் மீதமிருக்கையில் பெங்களூரு அணி வெற்றிப் பெற்றது ஒரு சாதனையாகும்.
2011இல் இப்போதுள்ள பிளேஆஃப் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தில் இருக்கும் அணிகள் மோதும்போது இரண்டாவது இடத்தில் உள்ள அணியே எப்போது முதல் தகுதி ஆட்டத்தில் வெல்வது வழக்கம். இம்முறையும் அதுவே நடந்துள்ளது.





