
அரபிக்கடலில் கியார்' புயலைத் தொடர்ந்து
மஹா’ புயல் மஹா’ புயல் உருவாகியுள்ளது. தொடர் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ச்சியாக மழை பெய்துகொண்டிருக்கிறது.
அதிகபட்சமாக மயிலாடியில் 117 மி.மீ மழையும், நாகர்கோவிலில் 111 மி.மீ மழையும் பதிவானது. மேலும், தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

மழை காரணமாக முக்கடல் அணை, மாம்பழத்துறையாறு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 70 அடியைத் தாண்டியது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை 37 அடியை தாண்டிவிட்டது. மழையால் மாவட்டம் முழுவதும் 23 வீடுகள் தரைமட்டமாயின.

சடையால்புதூர் பகுதியில் தென்னை மரம் முறிந்து விழுந்ததில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மழை காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு பெய்த மழையில், குளச்சலை அடுத்த பாட்டவிளை பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மரிய மதனலீலா என்ற 75 வயது மூதாட்டி பலியானார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.