
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்த விவகாரத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிலையை அவமதிப்பு செய்த மர்மநபர்களை கண்டுபிடிக்க ஒரு தனிப்படையை அமைத்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் பேரில் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
பிள்ளையார்பட்டியில் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என டிஜிபி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இரு தரப்பினருக்கு மோதல் ஏற்படுத்தும் வகையிலும் இது போன்ற குற்றச்செயல்களில் மர்மநபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, இதுதொடர்பான வழக்குகளின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.