
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை கவுதமி மட்டுமே கோவை திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொண்டார்.
நமீதா, ராதாரவி, குட்டிபத்மினி உள்ளிட்ட சினிமா பிரபலங்களை பிரச்சாரத்திற்கு அனுப்ப தமிழக பாஜக மூத்த நிர்வாகிகள் விரும்பாததால் அவர்கள் இந்த தேர்தலில் பரப்புரை மேற்கொள்ளவில்லை.
இதனிடையே நடிகை கவுதமி மட்டும் தன்னார்வமாக சென்று கொங்கு மண்டலத்தில் கடந்த 2 நாட்களாக பாஜக, அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.

பாஜகவில் எந்தவொரு பொறுப்பிலும் இல்லாமல் அடிப்படை உறுப்பினர் பதவியில் மட்டும் இருப்பவர் நடிகை கவுதமி. சென்னையில் பாஜக சார்பில் நடத்தப்படும் எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி முதல் ஆளாக கலந்துகொள்வார். மேலும், பல நேரங்களில் தன்னார்வமாக கட்சிப் பணிகளில் ஈடுபடுவார்.
நடிகை கவுதமியை பிரச்சாரம் செய்யுமாறு தமிழக பாஜக மூத்த நிர்வாகிகள் யாரும் வலியுறுத்தவும் இல்லை வறுபுறுத்தவும் இல்லை. இந்நிலையில் அவரது தன்னார்வம் காரணமாக கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று வரை அவர் பிரச்சாரம் செய்தார்.

குடியுரிமைச் சட்டத்துக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், அன்றாட பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நடைபெறும் இந்த தேர்தலோடு குடியுரிமைச் சட்டம் தொடர்பாக பொருத்திப் பார்க்க தேவையில்லை எனவும் நடிகை கவுதமி தனது பிரச்சாரத்தில் கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு முழுமையாக அது நிறைவேற்றப்படும் எனப் பேசிய கவுதமி, உள்ளாட்சித் தேர்தலில் பாஜக, அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி எனவும் தெரிவித்தார்.



