
தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகளில் குறைகள் தெரிவிக்க நம்ம தஞ்சை ஆப்ஸ் துவங்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா வருகின்ற 5ம் தேதி காலை நடைபெறுகிறது. இதற்காக கோயிலுக்கு புனித நீர் எடுத்து வரப்பட்டு அந்த நீர், 1ம் தேதி யாகசாலையில் வைத்து முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று காலை 2ம் கால யாகசாலை பூஜையும் அன்றைய தினம் மாலையில் 3ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. இன்று காலை 4ம்கால யாகசாலை பூஜை தொடங்கியது. சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் கலந்து கொண்டு மந்திரங்கள் ஓதினர். நேற்று விடுமுறை தினம் என்பதால் மக்கள் குடும்பம்குடும்பமாக வந்து பெருவுடையாரை தரிசித்து சென்றனர்.

கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் கோவிந்தராவ் நேற்று கோயிலில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: பெரியகோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தொடங்கப்பட்டுள்ள “நம்ம தஞ்சை” செயலி மூலமாகவும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
அதற்கான தொலைபேசி எண்கள் “நம்ம தஞ்சை” செயலியில் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு குறை இருந்தாலும் அந்த எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் தஞ்சை பகுதி செயலாளர் தேவா மற்றும் அந்த அமைப்பை சேர்ந்த பாலாஜி ஆகியோர் தஞ்சை புதிய பேருந்து நிலைய பகுதியில் நேற்று மாலை சுவரொட்டி ஒட்டினர்.

அதில், ”தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு, கட்டியவன் தமிழன், வழிப்படுபவனும் தமிழன், சமஸ்கிருதத்துக்கு இங்கென்ன வேலை, தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்து” என்று வாசகங்கள் இருந்தது.
இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த மருத்துவக்கல்லூரி போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முத்தரசன் இருவரையும் கைது செய்து தஞ்சை 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மோசஸ் ஜோசப் செபாஸ்டின், இருவரையும் வரும் 16ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் பாபநாசம் சிறையில் அடைக்கப்பட்டனர்.