டிஎன்பிஎஸ்சி தேர்வுமுறைகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் தேர்வு முறையில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு காரணமாக இதில் சிக்கிய நபர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாது என டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதேபோல் கடந்த 2017 ஆம் ஆண்டும் குரூப் 2 வில் தில்லுமுல்லு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் ஆதார் கட்டாயம் உள்ளிட்ட ஆறு முக்கிய மாற்றங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த வாரம் கொண்டுவந்தது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தற்போது மேலும் பல முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அவை பின்வருமாறு:-
குரூப் 4, குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளில் பொதுஅறிவு தாள் மட்டுமே கொண்ட ஒரே ஒரு தேர்வு மட்டுமே இதுவரை நடந்துவந்தது. இனிவரும் காலங்களில் இந்த தேர்வுகள் முதனிலை, முதன்மை தேர்வுகளாக நடந்தப்படும் என்று அறிவித்துள்ளது.
காலை 10 மணி முதல் 1 மணி வரை என் 3 மணிநேரம் நடக்கும் இந்த தேர்வுகளுக்கு, தேர்வு எழுதும் நபர்கள் காலை 9 மணிக்கே அறைக்கு வரவேண்டும். 10 மணிக்கு வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அனைத்து வினாக்களுக்கும் விடைகள் அளிப்பது கட்டாயமாகும். ஏதேனும் ஒரு வினாவுக்கு பதில் அளிக்கவில்லை என்றால் விடைத்தாள் செல்லாததாக்கப்படும். விடைத்தாளில் தேர்வரின் கையெழுத்துக்குப் பதில் கைரேகை பதிவு செய்யப்படும்
என பல அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கையெழுத்து மோசடி நடைபெறும் வாய்ப்பு உள்ளதால் அது கைரேகையாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.