
நாகையை அடுத்த நாகூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். 21 வயதாகிறது. இவர் ஒரு பட்டதாரி. கடந்த வருடம் இவருக்கு சென்னையில் ஒரு ஆஸ்பத்திரியில் முதுகில் ஆபரேஷன் செய்யப்பட்டது. இதற்கு பிறகு மாச மாசம் செக்கப்புக்கு வந்து, சிகிச்சையும் பெற்று கொள்ளுமாறு டாக்டர்கள் சொல்லி உள்ளனர்.
அதன்படியே முருகனும் சென்னைக்கு வந்து சென்றுள்ளார். இந்த சமயத்தில்தான் லாக்டவுன் போட்டுவிட்டனர். அதனால் சில மாதங்களாகவே முருகனால் சென்னைக்கு வர முடியவில்லை. மேலும், பஸ், ரெயில் என எல்லா போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் முருகனால் சென்னை வரவே முடியாத சூழல் ஏற்பட்டது.
முறையான சிகிச்சையை எடுத்து கொள்ள முடியாததால் முருகனுக்கு மறுபடியும் முதுகில் வலி வந்துவிட்டது. பொறுக்க முடியாத வலி ஏற்பட்டதால், தன்னுடைய பெற்றோரிடம் ட்ரீட்மென்ட்டுக்காக சென்னைக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார்.
ஆனால் குடும்பமோ வறுமையில் சிக்கி கொண்டுள்ளது. அதனால் போதுமான அளவுக்கு பணம் இல்லை என்று பெற்றோர் சொல்லி உள்ளதாக தெரிகிறது. இதனால் முதுகு வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட முருகன் வீட்டில் இருந்த விஷத்தை அதாவது பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தும், பலனின்றி முருகன் இறந்துவிட்டார்.
மருத்துவ சிகிச்சைக்கு செல்ல பணம் இல்லாத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. நாகூர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.