சென்னை: வாகனங்களுக்கு ஆயுள் கால சாலை வரி செலுத்துவது போன்று வாகனங்களுக்கான காப்பீட்டை ஆயுள் கால காப்பீடாக ஏன் மாற்றம் செய்யக் கூடாது என மத்திய அரசு, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக மார்ச் 4-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெகன் என்கிற ஜெகதீசன் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொன்னேரியில் இருந்து தச்சூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில், ஜெகனின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில், அவர் 65 சதவீதம் மாற்றுத் திறனாளியானார். அதனால், இழப்பீடு கோரி பொன்னேரி வாகன விபத்து காப்பீட்டு தீர்ப்பாயத்தில் ஜெகன் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த தீர்ப்பாயம் ஜெகனுக்கு ரூ. 2 லட்சத்து 24 ஆயிரத்து 500 வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சம்பந்தப்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த மனுவில், விபத்து ஏற்படுத்திய லாரி காப்பீட்டு வளையத்துக்குள் வரவில்லை. அந்த லாரியின் காப்பீடு 2011 நவம்பர் 17-ஆம் தேதியுடன் காலாவதியடைந்து விட்டது. இந்தச் சம்பவம் 2012 ஜனவரியில் நடைபெற்றது. எனவே, தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அதன் பின்னர் நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த இடைக்கால உத்தரவில்…. அமெரிக்காவை ஒப்பிடும் போது இந்தியாவில் குறைவான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், வாகன விபத்துக்கள் அமெரிக்காவை விட அதிகளவு நடைபெறுகின்றன. இந்தியாவில், 2002 முதல் 2013 வரை ஆண்டுக்கு நான்கு லட்சங்களுக்கு மேல் விபத்துகள் நடைபெற்றுள்ளன. ஆண்டுதோறும் விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பு, படுகாயமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. விபத்தில் சிக்கும் வாகனங்கள் தங்களது வாகன காப்பீட்டை புதுப்பிக்கவில்லை என பெருமளவு வழக்குகள் நீதிமன்றத்துக்கு வருகின்றன. மோட்டார் வாகன சட்டத்தின்படி முறையாக காப்பீடு செய்யாத வாகனங்கள் பொது இடத்தில் இயக்க உரிமை இல்லை. காப்பீடுகளை ஆண்டு தோறும் புதுப்பிக்க வேண்டியுள்ளது. இவ்வாறுதான் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வாகன உரிமையாளர்கள் காப்பீட்டை புதுப்பிக்க தவறுகின்றனர். மேலும், ஒரு வாகனத்தின் காப்பீடு நடப்பில் உள்ளதா அல்லது காலாவதியாகிவிட்டதா என்பதை அறிய போலீஸாரிடமோ, போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடமோ அதற்கேற்ப வசதிகள் இல்லை. புதிய வாகனங்கள் வாங்கும்போது, அதன் உரிமையாளரிடம் ஆயுள் கால சாலை வரி வசூலிப்பது போன்று, வாகனத்துக்கு ஆயுள் கால காப்பீடு வசூலித்தால் ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஆயுள் கால வாகன காப்பீடு வசூலிப்பது குறித்து காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்தை அறிய வேண்டும். அதனால், காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்படுகிறது. மேலும், வாகனங்களில் காலாவதியான காப்பீடு, புதுப்பிக்கத் தவறிய வாகனங்கள், விரைவில் காலாவதியாகக் கூடிய வாகனங்கள் ஆகியவற்றின் விவரங்களை சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரி, காவல் துறை அதிகாரி ஆகியோருக்கு அனுப்ப காப்பீடு ஒழுங்கு முறை ஆணையம் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்கும் உத்தரவிடுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். மேலும், மத்திய சட்டம், கம்பெனி விவகாரத் துறை, சாலை போக்குவரத்து ஆகிய துறைச் செயலர்கள், தமிழக போக்குவரத்துத் துறை செயலர், டி.ஜி.பி. ஆகியோரும் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும், நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை, காப்பீடு புதுப்பிக்கப்படாத வாகனங்களின் எண்ணிக்கை, காப்பீடு புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய போலீஸ், போக்குவரத்துத் துறையினரிடம் ஏதாவது வழிகள் உள்ளதா என்பது உள்பட அனைத்து கேள்விகளுக்கும் மார்ச் 4-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கு தொடர்பாக பொன்னேரி தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கிறேன் – இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.