
திமுக தலைவராக 49 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள, தமிழகத்தின் மூத்த அரசியல் கட்சித் தலைவர் மு.கருணாநிதி, இன்று 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
கடந்த 1969ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி திமுகவின் முதல் தலைவராக பொறுப்பேற்றார் கருணாநிதி. அன்றிலிருந்து இன்று வரை திமுகவின் தலைவர் பொறுப்பில் உள்ள அவர் 49 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன.
உலகிலேயே போட்டியிட்ட எல்லா தேர்தலிலும் வெற்றிபெற்ற ஒரே நபர் கருணாநிதி மட்டுமே.
தேர்தல்களில் தோல்வியே காணாதவராக திகழ்ந்த அவர் 1957ஆம் ஆண்டு முதல் முறையாக குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வுசெய்யப்பட்டார். அதிலிருந்து அனைத்து தேர்தல்களில் வெற்றிவாகை சூடியுள்ளார்.
80 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், தொடர்ச்சியாக 13 முறை சட்டமன்ற உறுப்பினர், 5 முறை தமிழக முதல்வர் என கடந்த நூற்றாண்டில் பல சாதனைகளைப் படைத்த கருணாநிதி, தற்போது ஒரு இயக்கத்தின் தலைவராக 50-வது ஆண்டை துவக்கியதன் மூலம் இன்னொரு சாதனையைப் படைத்திருக்கிறார்.



