
மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், தனியார் சார்ஜிங் மையங்கள் மற்றும் ரயில்வே துறையுடன், இப்போது சென்னை மாநகராட்சியும் சார்ஜிங் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் முதல் கட்டமாக சென்னையில் 9 இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் இணைந்து மேற்கொண்ட சாத்தியக்கூறு ஆய்வுகள் நிறைவு பெற்றுள்ளன.
சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
2 வாரத்தில் டெண்டர் கோரப்பட்டு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள்:
1) பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோயில் பார்க்கிங்,
2) பெசன்ட் நகர் கடற்கரை பார்க்கிங்,
3) அம்பத்தூர், மங்கல் ஏரி பார்க்கிங்,
4) தியாகராயர் நகர், மாநகராட்சி மைதானம் பார்க்கிங்,
5) தியாகராயர் நகர், சோமசுந்தரம் மைதானம்,
6) செம்மொழிப் பூங்கா, ஆயிரம் விளக்கு,
7) மெரினா கடற்கரை பார்க்கிங்,
8) அண்ணாநகர், போகன் வில்லா பூங்கா,
9) மயிலாப்பூர், நகேஸ்வரா ராவ் பூங்கா.
ரயில் நிலையங்களில் மின் வாகன சார்ஜிங் மையங்கள்
ரயில் பயணிகளின் வசதிக்காக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஏற்கெனவே உள்ள சார்ஜிங் வசதிகளை மேம்படுத்தவும், சில ரயில் நிலையங்களில் புதிதாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வரும் நிலையில் சிந்தாதிரிப்பேட்டை, மூர்மார்க்கெட், கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, கோட்டூர்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அடுத்து, செங்கல்பட்டு, திரிசூலம், தரமணி, சென்னை கடற்கரை, ஆவடி, கிண்டி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
சென்னை முழுவதும் உள்ள 28 முக்கிய ரயில் நிலையங்களில் புதிய சார்ஜிங் மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “பயணிகள் வசதிக்காக அனைத்து ரயில் நிலையங்களிலும் மின்சார இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு சார்ஜிங் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை, சென்ட்ரல் உள்ளிட்ட சில ரயில் நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கை மின்சார வாகனங்கள் பயன்படுத்தும் பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். விரைவில் இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்” என்றனர்.




