
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
65. புகழ்ச்சியின் விதிமுறைகள்!
ஸ்லோகம்:
ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா: பரோக்ஷே மித்ரபாந்தவா: |
கர்மான்தே தாசப்ருத்யாஸ்ச ந கதாசன புத்ரகா: ||
பொருள்:
குருநாதரை நேராகப் புகழ வேண்டும். நண்பரையும், உறவினரையும் மறைமுகமாகப் புகழ் வேண்டும். கூறிய வேலையைச் செய்து முடித்தபின் நம் கீழ் பணிபுரிபவர்களைப் புகழலாம். ஆனால் பெற்ற பிள்ளைகளை எப்பொழுதுமே புகழக் கூடாது.
விளக்கம்:
போற்றுதல் கடவுளுக்கு மட்டுமே அல்ல. புகழ்ச்சியால் மகிழாதவர் யார்? ஆனால் யாரை எங்கே புகழவேண்டும்? எங்கே புகழக் கூடாது? என்று தெரிவிக்கும் ஸ்லோகம் இது.
குருநாதரை அவர் முன்னிலையில் துதிக்க வேண்டும். அது அவரிடம் நாம் காட்டும் அன்புக்கும் பக்திக்கும் அடையாளம். நண்பரையும் உறவினரையும் நேரடியாக புகழ்ந்தால் முகஸ்துதியாக நினைக்க வாய்ப்புள்ளது. எதையாவது எதிர்பார்த்து உதவி வேண்டிப் புகழ்வதாக எடுத்துக்கொள்வார்கள். மறைமுகமாக நாம் அவர்களைப் புகழும் போது அதில் நேர்மை வெளிப்படும்.
அடுத்து நம் உத்தரவுப்படி பணிபுரிபவர்களை வெற்றிகரமாக வேலையை முடித்த பிறகு புகழலாம். அவர்கள் இனி வரும் நாட்களில் மேலும் உழைத்து நன்கு பணி புரியும்படி உற்சாகம் ஏற்படும். ஆனால் பெற்ற பிள்ளைகளை புகழக் கூடாது என்கிறது ஸ்லோகம். வாழ்த்துவது வேறு. புகழ்வது வேறு.
குழந்தைகளுக்கு நாம் செய்யும் புகழ்ச்சியால் அவர்களில் கர்வம், இறுமாப்பு போன்ற தீய குணங்கள் தலையெடுக்கும் ஆபத்துள்ளது. தாம் உயர்ந்தவர்கள் என்றும், அறிவாளிகள் என்றும், திறமைசாலிகள் என்றும், சிறுவயதிலிருந்தே நினைக்கத் தொடங்கிவிடுவார்கள்.
இனி சாதிப்பதற்கு எதுவுமே இல்லை என்ற பிரமைக்கு ஆளாகி விடுவார்கள். அதனால் அவர்களுடைய உடல், மனம், புத்தி, தார்மீக முன்னேற்றம் இவற்றின் வளர்ச்சி தடைப்படும். அதனால்தான் தம் குழந்தைகளை பெற்றோர் புகழக் கூடாது என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள் என்பதை உணர்ந்து கவனமாக இருக்க வேண்டும்