
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
81. உள்நாட்டுப் பாதுகாப்பு!
ஸ்லோகம்:
ராஜானம் ப்ரதமம் விந்தேத் ததோ பார்யாம் ததோ தனம் |
ராஜன்யசதி லோகஸ்ய குதோ பார்யா குதோ தனம் ||
– மகாபாரதம்
பொருள்:
மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டுமென்றால் அரசாளுபவர் நல்லவராக இருக்க வேண்டும். அதனால் பொதுமக்கள் முதலில் நல்ல அரசனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் தான் திருமணம், பணம் சம்பாதிப்பது எல்லாம். பாதுகாப்பு அளிக்க இயலாத அரசனோ, காப்பாற்ற இயலாத அரசாங்கமோ இருந்தால் மக்களின் குடும்பத்திற்கும் செல்வத்துக்கும் பாதுகாப்பு எங்கிருந்து கிடைக்கும்?
விளக்கம்:
உள்நாட்டுப் பாதுகாப்பு ஏற்படுத்துவது அரசாங்கத்தின் முதல் கடமை. வளர்ச்சிக்கு அதுவே அடையாளம். நாம் தேடிய செல்வத்தை திருடர்கள் கொள்ளையடித்தால்… வயல் வெளிகளையும் சொத்து சுகங்களையும் பிறர் ஆக்கிரமித்தால்… அது அரசரின் குற்றமே!
எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் இந்த செய்தி மகாபாரத காலத்திலேயே அளிக்கப்பட்டுள்ளது.
திறமையான அரசாட்சி அமையாவிட்டால் நாம் தேடிய செல்வத்துக்கு பாதுகாப்பு இருக்காது. நம் வீட்டுப் பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. பொதுமக்களளின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம். பாதுகாப்பு அமைப்பு பாரபட்சமின்றி பொதுமக்களுக்காக பணி புரியவேண்டும். அதுவே நல்ல அரசாட்சியின் அடையாளம். வலிமை குன்றியோருக்கு அரசாங்கம் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
ஜனநாயக நாட்டில் மக்கள் தேர்தலில் உற்சாகமாக பங்கு கொள்ள வேண்டும். ஓட்டுரிமையை நன்கு பயன்படுத்த வேண்டும். ஜனநாயக நாட்டில் நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பொதுமக்களுடையதே என்பது இதன் உட்பொருள்.