
ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
பாடலும் விளக்கமும்!
விளக்கம்: வேதா டி.ஸ்ரீதரன்
அங்கண் மா ஞாலத்(து) அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்(டு) எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய். (22)
பொருள்
உலகின் அனைத்து வளங்களையும் அடையப்பெற்று, இந்தச் செல்வங்களினால் எந்தப் பலனும் இல்லை என்பதை அறிந்து, நீ ஒருவனே இறுதி இலக்கு என்பதை உணர்ந்து, உன் பாத கமலங்களில் ஐக்கியமானவர்கள் ஏராளம். நாங்களும் உன் அடியிணையைச் சரணடைந்தோம். தாமரையிதழ் கொஞ்சம் கொஞ்சமாக மடல் அவிழ்ந்து முழுமையாக மலர்வதைப் போல, நீயும் உன் திருவிழிகளை மலர்த்தி எங்களைக் கடாக்ஷிப்பாயாக! அறக்கருணையும் மறக்கருணையும் ஒருங்கே தாங்கிய உனது திருவிழிப் பார்வை எங்கள் மீது பட்டாலே போதும், எங்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
அருஞ்சொற்பொருள்
அங்கண் – அழகிய
மா – பெரிய
மா ஞாலம் – விரிந்து பரந்த உலகு
அபிமான பங்கமாய் – தான் என்ற எண்ணம் நீங்கியவர்களாக
நின் பள்ளிக்கட்டு – நீ கண்வளரும் கட்டில்
சங்கம் இருப்பார்போல் – திரளாக வந்து
வந்து தலைப்பெய்தோம் – வந்து வணங்கி நிற்கிறோம்
கிண்கிணி வாய் – குழந்தைகளின் விளையாட்டுப் பொருளான கிலுகிலுப்பையின் வாய்ப்பகுதி
கிண்கிணி வாய்ச்செய்த – கிலுகிலுப்பையின் வாய்ப்பகுதியைப் போன்று சின்னஞ்சிறு அளவில்
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் – சந்திரனும் சூரியனும் ஒரே நேரத்தில் உதிப்பது போல
அங்கண் இரண்டும் – உன் அழகிய திருநயனங்கள் இரண்டும்
நோக்குதி – பார்ப்பாயாக
நோக்குதியேல் – பார்ப்பாயானால்
இழிந்து – அழிந்து போகும்படி
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் –
சங்கம் என்பது கூட்டுச் சேர்வது. பலர் ஒன்றுகூடி சத் விஷயங்களில் ஈடுபடுவது. சத் சிந்தனைகளில் திளைத்திருப்பது. பகவானுக்கும் அடியார்களுக்கும் சேவை புரிவது.
அதேபோல, உன்மீது பக்தி கொண்டவர்களாகிய நாங்களும் கூட்டாகச் சேர்ந்து உன் பள்ளியறை வாசலுக்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் –
திங்கள் என்பது குளிர்ச்சியானது – பெருமாளின் அறக்கருணையைக் குறிப்பால் உணர்த்துவது.
சூரியன் வெம்மையானது – பெருமாளின் மறக்கருணையைக் குறிப்பால் உணர்த்துவது.

மொழி அழகு
தலைப்பெய்தோம் –
‘அரசர்கள் சங்கமித்திருப்பது போல’ கோபிகைகள் கூட்டம் வெள்ளமென வந்து சேர்ந்திருப்பதைத் தெரிவிக்கிறாள். ‘பள்ளிக்கட்டிற் கீழே’ என்று சொன்னதன் மூலம், கோபிகைகள், கிருஷ்ணன் உறங்கும் பள்ளிக்கட்டுக்குக் கீழே வந்து சேர்ந்து விட்டனர் என்பது உணர்த்தப்படுகிறது.
***
கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே –
பள்ளி கொண்டிருக்கும் கிருஷ்ணன், தனது திருக்கண்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மலர்த்தி விழித்தெழ வேண்டும் என்று வேண்டுகிறார்கள்.
தாமரை இதழ்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் திறப்பது போல அவன் கண்கள் மலர வேண்டுமாம்.
இங்கே தாமரை மலர்வதை வர்ணிப்பதற்கு ஆண்டாள் கிலுகிலுப்பையின் (அல்லது சலங்கையின்) வாய்ப்பகுதியை உவமையாகக் காட்டுகிறாள்.
கிலுகிலுப்பையின் வாய்ப்பகுதி மிகவும் சிறியதாக இருக்கும். அந்த இடத்தில் பூவிதழ் போன்ற வேலைப்பாடுகளும் இருக்கும். அதைப்போலவே தாமரை இதழ்களும் ஒன்றுக்கொன்று சிறு சிறு இடைவெளி விட்டு மெதுவாக மலருமாம். பெருமாளும் அதேபோல விழிகளைத் திறக்க வேண்டும் என வேண்டுகிறாள் ஆண்டாள்.
ஆன்மிகம், தத்துவம்
அபிமான பங்கமாய் –
அபிமானம் என்பது தன்னைப் பற்றிய பெருமிதம். மனிதன் ஓயாமல் தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது இந்தப் பெருமிதமே.
அபிமானம் எதனால் ஏற்படுகிறது?
தான் என்கிற எண்ணமே இதற்கு அடிப்படையாக அமைகிறது. தான் என்கிற எண்ணம் ஒவ்வொரு மனிதனையும் தனித்துக் காட்டுகிறது. வாக்குக்கும் மனதுக்கும் – ஏன், கற்பனைக்குமே கூட – எட்ட முடியாத இந்த மாபெரும் சிருஷ்டியில் மனிதன் என்கிற ஜீவன், அணுவிலும் பல நூறாயிரம் கோடியில் ஒரு பங்கு கூட இருக்க முடியாது. இந்த மாபெரும் சிருஷ்டியின் ஒரு மிகச்சிறிய அங்கம் என்பதை ஏற்காமல், மனிதன், தன்னை ‘தனித்துவம் கொண்ட ஒருவனா’கப் பார்க்கிறான். இதுவே அஹங்காரம் எனப்படுவது.
இதைத்தொடர்ந்து என்னுடைய உடல், என்னுடைய பொருட்கள், என்னுடைய உறவுகள் முதலான சகலமும் ஏற்படுகின்றன. இது மமகாரம் எனப்படுகிறது.
இந்த அகங்கார, மமகாரத்தினால் ஏற்படுவதே சுய அபிமானம். பகவானின் அடியிணைகளே தஞ்சம் என்ற பக்குவம் ஏற்படும்போது அகங்கார, மமகாரங்கள் இயல்பாகவே மறைகின்றன. சுய அபிமானமும் தானாகவே மறைகிறது. இதுவே அபிமான பங்கம்.
***

சங்கம் இருப்பார் போல் –
சிலர் அல்லது பலர் கூட்டாகச் சேர்ந்து செயல்படுவதே சங்கம் அல்லது கூட்டமைப்பு. இங்கு அது, அடியார் கூட்டத்தைக் குறிக்கிறது. பலர் கூட்டாகச் சேர்ந்து புனிதப் பணிகளில் ஈடுபடுவது சத்சங்கம் எனப்படும். பாவை நோன்பு என்பதே சத்சங்கம்தான். கோபிகைகள் கூட்டாகச் சேர்ந்து விரதம் இருப்பதையே அவள் பாவை என்று வர்ணிக்கிறாள். திருப்பாவை முழுவதுமே நல்லோர் சேர்க்கையை மையமாகக் கொண்டதுதான்.
***
செங்கண் சிறுச்சிறிதே –
கடைக்கண் பார்வை வேண்டும் என்று சொல்வதுண்டு. கடைக்கண் பார்வை, கடாக்ஷிப்பது என்றெல்லாம் சொல்கிறோம். கடாக்ஷம் (கட + அக்ஷம் = கடாக்ஷம்) என்பதும் கடைக்கண் பார்வையே. பகவானின் பார்வையை நேருக்கு நேர் தரிசிக்கும் ஆற்றல் நமக்கு இல்லை. எனவே, ஆலயங்களில் இருக்கும் அர்ச்சாவதார மூர்த்திகளை (தெய்வ விக்கிரகங்களை) தரிசிக்கும்போது, பக்கவாட்டில் இருந்து கடைக்கண் பார்வையை மட்டுமே தரிசிக்க வேண்டும்.