
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
91. காலம் காத்திருக்காது
ஸ்லோகம்:
ஸ்வ: கார்யமத்ய குர்வீத பூர்வாஹ்ணே சாபராஹ்ணிகம் !
ந ஹி ப்ரதீக்ஷதே ம்ருத்யு: க்ருதமஸ்ய ந வா க்ருதம் !!
– மகாபாரதம்.
பொருள்:
நாளைக்குச் செய்ய வேண்டிய வேலையை இன்றே செய்ய வேண்டும். மதியம் செய்ய வேண்டிய வேலையை காலையே செய்ய வேண்டும். வேலைகள் முடிந்து விட்டதா? இன்னும் உள்ளனவா? என்று மரணம் காத்திருக்காது.
விளக்கம்:,
நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை இன்றே செய். நல்ல செயல்களை ஒத்தி போடாதே என்று எச்சரிக்கும் ஸ்லோகம் இது.
நமக்கு என்று ஒதுக்கப்பட்ட வேலைகளுக்கும், நாமே செய்து தீர வேண்டிய வேலைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது இதன் உட்பொருள். தர்மத்தின்படி நடப்பதற்கும் நற்செயல்களைச் செய்வதற்கும் காலம் தாழ்த்தக் கூடாது. அவசரப்படவேண்டும் என்பது இதன் போதனை.
தேர்வுக்குச் செல்ல வேண்டிய மாணவன் திரைப்படம் பார்க்க வேண்டும் என்ற ஆசையை ஒதுக்கி வைக்க வேண்டும். அது தவறல்ல. நேரத்திற்கு உறங்கச் செல்வதா? தொலைக்காட்சிப் பெட்டியின் எதிரில் அமர்வதா? எதை ஒதுக்கி வைப்பது? எதற்கு முக்கியத்துவம் அளிப்பது? என்பதற்கு இங்கித ஞானம் தேவை.
சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்காமல் போவது என்பது நம் நாட்டில் சர்வ சாதாரணம் என்ற விமர்சனங்களை கேட்கிறோம். மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்த பிறகு சரியான நடவடிக்கை எடுக்காததால்தான் பாகிஸ்தான் நம் நாட்டு எல்லையில் பலமுறை தாக்குதலுக்கு இறங்குகிறது.
நிறுத்தக் கூடாத நேரத்தில் போரினை நிறுத்தி யுஎன்ஓ நோக்கிச் சென்றதால் காஷ்மீர் பிரச்சனை தீராமல் பற்றி எரிந்து கொண்டே உள்ளது.