spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?ஐபிஎஸ்., கனவு... வாழ்க்கைப் போராட்டம்... விடாப்பிடி விஜயகுமாரின் உருக்கமான பதிவு!

ஐபிஎஸ்., கனவு… வாழ்க்கைப் போராட்டம்… விடாப்பிடி விஜயகுமாரின் உருக்கமான பதிவு!

- Advertisement -

இன்று காலை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் கோவை சரக டி ஐ ஜி விஜயகுமார் குறித்த பழைய பதிவு ஒன்று சமூக தளங்களில் வைரலாகி பெரும்பாலானோரின் கண்ணீரை காணிக்கையாகப் பெற்றிருக்கிறது.

அதில், ஆயிரம் ரூபாய் வேலை… ஐபிஎஸ் கனவும்
‘ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்று நம் இலக்கை எட்டும் முன், ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுவோம். திடீர் என்று நம் இலக்கை மறந்துவிட்டு, இருக்கும் வேலையே போதும் என செட்டில் ஆகிவிடும் மன நிலைக்குத் தள்ளப்படுவோம். அந்தப் புள்ளியிலேயே சுதாரிக்க வேண்டும். அதில் இருந்து உடனடியாக மீளாவிட்டால், வாழ்க்கைப் பயணம் நாம் ஆசைப்பட்ட திசையில் இருக்காது!” என்று அனுபவம் பகிர்கிறார் விஜயகுமார் ஐ.பி.எஸ். பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் விடாப்பிடி உறுதி முயற்சியுடன் ‘ஐ.பி.எஸ்.’ பட்டம் தொட்டவர்.

அவருடைய பழைய பதிவு:

”தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி தான் என் சொந்த ஊர். அப்பா செல்லையா வி.ஏ.ஓ. என் அம்மா ராஜாத்தி, பள்ளி ஆசிரியை. ப்ளஸ் டூ வரை தமிழ் வழிக் கல்வியில்தான் படித்தேன். ஒரே மகனான என்னை டாக்டர் இல்லேன்னா, இன்ஜினீயர் ஆக்கிப் பார்க்க அவங்களுக்கு ஆசை. மெக்கானிக்கல் இன்ஜினீயர் ஆயிட்டேன். சாதாரண கடைநிலை ஊழியரான அப்பாவைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்ததால், மாவட்ட அளவு அதிகாரம் படைத்த ஓர் அரசு அதிகாரி ஆகணும்னு அடிக்கடி மனசுல தோணிட்டே இருக்கும். அது போக, போடி கலவரம், தேவாரம் கலவரம், கஞ்சா விவ சாயம்னு எங்க பகுதியில் எல்லாப் பக்கமும் க்ரைம்தான்.

போலீஸ் அதிகாரியானால் நம்மால் முடிஞ்ச உதவியை மக்களுக்குச் செய்யலாம்னு தோணும். ‘மாவட்ட அளவிலான போலீஸ் அதிகாரி’ என்ற என் இரண்டு ஆசைகளையும் பூர்த்திசெய்வது ஐ.பி.எஸ்., பதவி மட்டும்தான்னு தெரிஞ்சுக் கிட்டேன். அந்தத் திசையில் பயணிக்கத் தொடங்கினேன்.
கல்லூரிப் படிப்பு முடிஞ்சதும் சரியான வேலை எதுவும் அமையலை. சென்னையில் தங்கி சிவில் சர்வீஸ் பரீட்சைகளுக்குப் படிக்கிற அளவுக்கு வசதியும் இல்லை.

ஏதாவது வேலையில் சேர்ந்து சின்னதா சம்பாதிச்சுட்டே படிக்கலாம்னு முடிவு பண்ணி, ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு ஜெராக்ஸ் எடுக்கிற வேலையில் சேர்ந்தேன். 12 மணி நேர வேலைப் பளுவுக்குப் பிறகு படிக்க முடியலை. நாலு மாசத்திலேயே வேலையை விட்டுட்டேன். ஏதாவது
ஓர் அரசு வேலையில் சேர்ந்துட்டு, படிக்கலாம்னு முடிவு பண்ணேன். 1999-ல் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிச்சேன். ஏனோதானோன்னுதான் படிச்சேன். தேர்வில் தோல்வி. அதே சமயத்தில் குரூப்-2 தேர்வுக்கும் விண்ணப்பித்து இருந் தேன். அந்தத் தேர்வுக்கு ஆறு மாசம் தீவிரமாப் படிச்சேன். 2000-ல் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் ஆடிட் இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தேன்.

அதே வருஷம், குரூப்-1 தேர்வும் எழுதினேன். முதற்கட்டம், மெயின், நேர்முகத் தேர்வுன்னு இரண்டு வருட நடை முறை முடிந்து 2002-ல் ரிசல்ட் வந்தது. தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி., ஆனேன். தொடர்ந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முயற்சிகள். அடுத்தடுத்து ஆறு தடவை முயற்சிகள். நான்கு முறை மெயின் தேர்வு வரையிலும், மூன்று முறை நேர்முகத் தேர்வு வரையும் சென்றேன். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழு முறை தேர்வு எழுத முடியும். அது எனது கடைசி ஏழாவது முயற்சி. வெற்றி!

ஆனால், தேர்வுக்கான ஆயத்தங்களைக் காட்டிலும் அந்த காலகட்டங்களில் நான் கடந்து வந்த மன உளைச்சலின் வீரியம் வார்த்தையில் அடங்காது. டி.எஸ்.பி-யாக நான் பணிபுரிந்த ஆறு ஆண்டுகளில் ஈரோடு, திருவள்ளூர், சி.பி.சி.ஐ.டி., சென்னை கமிஷனர் அலுவலகம், ஆவடி உட்பட ஆறு இடங்களுக்கு என்னை டிரான்ஸ்ஃபர் செய்தார்கள். காரணம், சிவில் சர்வீசஸ் தேர்வு.
‘இன்டர்வியூ போகணும்… மெயின் எக்ஸாமுக்குப் படிக்கணும்… ஒரு மாசம் லீவு வேணும்’னு கேட்டால், உடனே ஒரு டிரான்ஸ்ஃபர் பரிசாகக் கிடைக்கும். வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் முழு நேரமும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மட்டுமே படித்துக்கொண்டு இருந்தால், நிச்சயம் முதல் இரண்டு முயற்சிகளிலேயே யாருக்கும் வெற்றி நிச்சயம்!

சிவில் சர்வீசஸ் விண்ணப்பத்தில் விருப்பப் பணியில் ‘ஐ.பி.எஸ்’ என்று மட்டுமே எழுதினேன். ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ். பிரிவின் கீழ் 0 என்றே குறிப்பிட்டு இருந்தேன். நேர்முகத் தேர்விலும் காவல் துறை பற்றிய கேள்விகள் தான் சுற்றிச் சுழன்றன. ‘எப்படிங்க உங்க ளுக்கு நேரம் கிடைச்சது? எப்படிப் படிச் சீங்க’ன்னு நட்பாகத்தான் என்னை எதிர் கொண்டார்கள். சிவில் சர்வீஸில் தேறி ஐ.பி.எஸ்., பணி உறுதியானாலும் டி.எஸ்.பி., பணியில் இருந்து நான் உடனடியாக விலகவில்லை. தமிழக முதல்வரிடம் சிறப்பு அனுமதி பெற்று, ஓர் ஆண்டு விடுமுறையில்தான் பயிற்சிக்குச் சென்றேன். ஒரு வேளை பயிற்சி முடிந்த பிறகு, வேறு மாநிலத்தில் பணி அமர்த்தப்பட்டால், ‘ஐ.பி.எஸ். வேண்டாம்’னு சொல்லிட்டு, தொடர்ந்து தமிழகத்திலேயே டி.எஸ்.பி. ஆகப் பணிபுரியத்தான் ஆசை.

நீங்கள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகும்போது தங்குவதற்குச் சிரமமாக இருக்கலாம். புத்தகங்களைப் பெறுவதில் சிரமம் இருக்கலாம். வீட்டிலும், ‘என்னப்பா படிச்சுட்டே இருக்கேன்னு சொல்ற. எப்பதான் பாஸ் பண்ணப்போற?’னு கேட்பார்கள். சில உறவினர்கள் கிண்டல் அடிக்கக்கூடச் செய்வார்கள். எந்தச் சூழலிலும் சோர்ந்துபோகவே கூடாது. நேர்மறை எண்ணம் கொண்டவர்களை மட்டுமே பக்கத்தில் சேருங்கள். வீட்டில் எவ்வளவு சிரமம் இருந்தாலும், அதைத் தாங்கிக்கொண்டு வேறு வேலைக்குச் செல்லாமல் ஒரே லட்சியத்தோடு படித்தால் நலம். குரூப்-2, குரூப்-1 என கொஞ்சம் தடம் மாறியதால்தான் என் வெற்றி தள்ளிப்போனது. ‘இதுவே போதும்’ என்று எங்கேயும் தேங்கிவிடாதீர்கள். ஓடிக்கொண்டே இருங்கள். வெற்றி உங்களைப் பின் தொடரும்!” – என்று எழுதி இருக்கிறார்.

அவருடைய கனவுகள், உத்வேகமூட்டும் பேச்சு, உறுதியான உள்ளம் எல்லாம் வெளித்தெரிந்தும், அவர் தன் வாழ்க்கையை இப்படி முடித்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று சமூக வலைதளவாசிகள் பெரும் அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று தமிழக காவல் துறைக்கு கருப்பு தினம் – என்றும் குறிப்பிட்டு விஜயகுமாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe