திருநெல்வேலி: தமிழகத்தில் அரசியல் நாகரீகம் மலர்ந்து கொண்டிருக்கிறது என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
நெல்லையில் கருணாநிதிக்கு அரசியல் கட்சிகள் சார்பில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் தமிழிசை சில கருத்துகளை தெரிவித்திருக்கிறார். அதில் உருக்கம், நகைச்சுவை என எல்லாம் வெளிப்பட்டுள்ளது.
“மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கருணாநிதியிடம் மருத்துவர்கள், சுகர் இல்லாமல் கண்ட்ரோல் செய்திருக்கிறீர்களே.. முதுகுவலி எப்படி வந்தது என்று ஒரு கேள்வி கேட்டார்களாம். அதற்கு கருணாநிதி, ‘சுகரை நான் கண்ட்ரோல் செய்தேன். ஆனால் அரசியலில் முதுகில் குத்துபவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் முதுகுவலி வந்துவிட்டது என்றாராம்” என்று தமிழிசை இதனை குறிப்பிட்டுக் கூறினார்.
மேலும், “தனது தொண்டர்களுடைய எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றிய கருணாநிதி, தமிழக மக்கள் வைத்த எழுந்து வா என்ற கோரிக்கையை மட்டும் நிறைவேற்றாமலேயே போய்விட்டாரே” என்றார்.
மாநில முதல்வர்களுக்கும் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்த கருணாநிதி மறைவுக்கு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு, மாநிலங்களவை, மக்களவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பாரதத்தில் பல ரத்னங்கள் இருந்தாலும், அதில் அவரும் ஒருவர்… அவர் பாரத ரத்னாவாக ஜொலிக்கப் போகிறார்…
“நடக்க முடியாத ஒரு காரியத்தையும் நடத்திக்காட்டக்கூடியவர் கருணாநிதி. அதுதான் அவரது ஆளுமை. தனித்திறமை. அவர் இறந்த பிறகும்கூட, திக.,தலைவர் வீரமணியின் அருகில் தமிழிசையை பக்கத்தில் உட்காரவைத்து சென்றுவிட்டார் என்றால் அதுதான் கருணாநிதி…. என்றார்! அவரது இந்தப் பேச்சு பலரது கைத்தட்டலைப் பெற்றது.
இந்தக் கருத்தை சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ள சிலர், அப்பப்போ அதான் கழுத்தை தடவிப் பார்த்துக் கொண்டே இருந்தார் தமிழிசை. தாலி இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தபடி! என்று கருத்து கூறியுள்ளனர்.
மேலும், “சென்னைக்கு வாஜ்பாய் அஸ்தி வந்தபோது, முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்தியவர் ஸ்டாலின் என்று கூறிய தமிழிசை, வாஜ்பாய், கருணாநிதி இருவரும் விண்ணுலகம் சென்று அரசியல் அனுபவங்களை பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
இந்தக் கருத்துக்கு பதில் கருத்து கூறியுள்ள நெட்டிசன்கள், ஆவி அமுதா பேச வேண்டியதை எல்லாம் தமிழிசை பேசுறாங்க என்று கேலி செய்துள்ளனர்.




