
-> குச்சனூர் கோவிந்தராஜன்

Nallur Kandaswamy Kovil or Nallur Murugan Kovil (Tamil: நல்லூர் கந்தசுவாமி கோவில்) is one of the most significant Hindu temples in the Jaffna District of Northern Province, Sri Lanka. It stands in the town of Nallur. The presiding deity is Lord Murugan in the form of the holy Vel. The idol of the Nallur Devi or goddess was given to the temple in the 10th century CE by the Chola queen Sembiyan Mahadevi, in the style of Sembian bronzes.
இந்திய தேசத்தில் மட்டுமின்றி பல நாடுகளிலும் உள்ள இந்து மத கோயில்கள் பல பழம் பெருமையும் சிறப்பும் கொண்டவையாக இருக்கின்றன. அவற்றின் வரலாறுகளையும் வெளிப்படுத்தும் பண்பாட்டின் சிறப்புகளையும் எண்ணும்போது அவை இந்தியாவில் உள்ள புராதன கோயில்களுக்கு இணையாக உள்ளதை உணர முடிகிறது . அத்துடன் அவை இந்துமத ( சனாதன தர்மத்தின்) பெருமையையும் ஒற்றுமையையும் வளர்ப்பவையாக விளங்குகின்றன .
அவ்வகையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் நல்லூர் கந்தசாமி கோயில் இலங்கையின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகவும் யாழ்ப்பாண சைவர்களின் புகலிடமாகவும் விளங்குகின்றது .
சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் புவனேகபாகு எனும் ஆரிய அரசனால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது . முதலில் சேனாதிபதியாக இருந்த பொழுது செண்பகப் பெருமாள் என அழைக்கப்பட்ட இவர், பின்னர் இராஜ்யத்தின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். மன்னராக மாறிய பொழுது இவர் சூட்டிக் கொண்ட பெயர் புவனேகபாகு ஆகும் .
புவனேகபாகு இக்கோயிலின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் என்பதும் பல திருப்பணிகள் செய்துள்ளார் என்பதும் இன்றும் திருவிழாக்கள் துவங்கும் முன் கூறும் கட்டியம் மூலம் அறியப்படுகிறது . சம்பிரதாயத்தில் உள்ள அச்செயலில் ரகுநாதன் மாப்பாண முதலியார் எனும் பெருந்தகையின் பெயரும் கூறப்படுகிறது. மன்னருக்கு பிறகு இக்கோயிலை புனருத்தாரணம் செய்தவர் அவர் என்பதால் கட்டியதில் அவரையும் சேர்த்து புகழ்கிறார்கள்.
புவனேகபாகு இராஜ்ஜியத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த இக்கோயில் பெரிய கோவிலாகவும் புகழ்பெற்றும் விளங்கியது. 1619 இல் யாழ்ப்பாணப் பகுதியை கைப்பற்றிய போர்த்துகீசியர்கள் பலநூறு கோயில்களை இடித்து தரைமட்டமாக்கினர் அங்கே கோயில்கள் இருந்ததற்கான அடையாளங்களை கூட விடாமல் இடித்து அழித்தனர்.
நல்லூர் மக்கள் எத்தனையோ உதவிகள் செய்வதாக வாக்குறுதி தந்தபொதும் போர்த்துகீசிய பிரதிநிதி பிலிப் தனது மதத்தின் மீதிருந்த பிடிப்பால் நல்லூர் கோயிலையும் இடித்து தரைமட்டமாக்கியது டன் அவ்விடத்தில் கோயில் இருந்ததற்கான அடையாளங்களையும் அழித்தான். ஆனால் பரசுபாணி எனும் அந்தணர் கோயிலில் இருந்த முக்கிய விக்கிரகங்களை கிணற்றில் மறைத்து வைத்துக் காப்பாற்றினார். சங்கிலி எனும் கோயில் பண்டாரம் ஆலயம் குறித்த செப்புப்பட்டயங்களைக் காப்பாற்றினார் என்று யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது.
1734 நல்லார் எனும் அரசனிடம் அதிகாரியாய் இருந்த இரகுநாத மாப்பாண முதலியார் சிறிய அளவில் கந்தசாமி கோயிலை கட்டி மடாலயம் போல் பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்தார். இரகுநாத மாப்பாண ருக்கு உதவி செய்த கிருஷ்ண சுப்பையர் என்பவரே இக்கோயிலில் பூஜை செய்த முதல் குருக்கள் ஆவார். சிறிய அளவில் இருந்த கோயிலை மாப்பாணரின் வம்ச வழி வந்தவர்கள் படிப்படியாக வளர்த்து இன்று பிரம்மாண்டமான கோயிலாக மாற்றி உள்ளனர். புனருத்தாரணம் செய்த மாப்பாணரின் உருவமும் அவர் மனைவியின் உருவமும் மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தின் முதல் நாள் படையல் வைக்கப்பட்டு உருவங்களுக்கு முன் வழிபாடு செய்யப்படுகிறது. தற்போது இக்கோயில் ஐந்து அடுக்கு பிரதான கோபுரம் ஒன்பது அடுக்குகள் கொண்ட இரண்டு ராஜகோபுரங்கள் ஆறு மணி கோபுரங்களும் கொண்டு பிரம்மாண்ட கோயிலாக விரிவு பெற்றுள்ளது. திருக்குளமும் பூந்தோட்டமும் கோயில் அழகினை மேலும் பொலிவு பெறச் செய்கின்றன. கோயிலின் சிறப்புகள் இக்கோயிலில் நடைபெறும் திருப்பள்ளி எழுச்சியும் திருவனந்தல் அதாவது பள்ளியறை சேர்தல் எனும் நிகழ்வும் மிகவும் சிறப்பானவை.
இதற்காக பயன்படுத்தப்படும் வாகனம் மிகுந்த வேலைப்பாடு உடையது. இப்பூஜையை அந்தணர்களும் பக்தர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரவாரத்துடன் செய்வர். இக்கோயிலில் நேரம் தவறாது செய்யப்படும் பூஜைகளில் பக்தர்கள் மிகுந்த ஈடுபாடு கொள்கிறார்கள். யாருக்காகவும் பூஜை நேரங்களை மாற்றியும் நேரங்கழித்தும் செய்வதே இல்லை. தொடர்ந்து 25 நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவின்போது யாழ்ப்பாண நகர பகுதியில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பெருந்திரளாக பக்தர்கள் கலந்து கொள்வர்.
இத்திருவிழா ஆடி அமாவாசை முடிந்த சஷ்டியில் துவங்கி ஆவணி அமாவாசை அன்று பூர்த்தியாகும். இந்த இருபத்தி ஐந்து நாள் திருவிழாவும் விசேஷமானது என்றாலும் பத்தாம் நாள் திருவிழாவும் தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாவும் மிகவும் விசேஷமானவை. அந்நாளில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.

நல்லூர் கந்தசாமி கோயிலின் பெயரால் நாணயங்கள்
யாழ்ப்பாண அரசர்களின் நாணயங்கள் என்றும் வேறுபட்ட அம்சங்கள் பொருந்திய சில நாணயங்கள் அண்மைக்காலத்தில் யாழ்ப்பாணத்திலும் பூநகரி பகுதியிலும் கிடைத்துள்ளன. இந்த வகையில் உள்ள நாணயங்களின் சிறப்பம்சம் ஒரு புறத்தில் மயில் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது மயிலின் மேல் இளம்பிறையின் உருவமும் அதன் மேலே புள்ளி போன்ற அடையாளமும் உருவமும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அம்சம் ஆரிய சக்கரவர்த்திகளின் நாணயங்களில் நந்தியின் மேல் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண மன்னர்களின் நாணயங்களில் சில அம்சங்களையும் அவற்றின் விளிம்புகளில் வடிவமைப்பினை பின்பற்றி மயில் உருவம் அமைந்த நாணயங்கள் வார்க்கப்பட்டுள்ளன. முருகக்கடவுளின் சின்னமாகும் பின்புறத்தில் நான்கு பிரிவுகளைக் கொண்ட நீள் சதுரமான வடிவம் கோபுரத்தின் அடையாளம் என்று கொள்ளக்கூடிய சிற்றுருவம் என்பன தெரிகின்றன. கந் என்ற தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன.
இவற்றை கந்தசுவாமி என்ற கடவுள் பெயரில் சுருக்கம் என்று கொள்ளலாம். இன்னொரு வகையான நாணயங்களில் கந் என்ற எழுத்துக்குப் பதிலாக ஆ என்னும் எழுத்து ஓரளவு பெரிதாக எழுதப்பட்டுள்ளது அது ஆறுமுகசுவாமி என்ற பெயரின் முதல் எழுத்தாகும். எனவே மயில் உருவம் பொறித்த நாணயங்கள் கந்தக் கடவுளின் பெயரால் செண்பகப்பெருமாள் ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்டவை என்று கொள்வது பொருத்தமானது.
இதன் அடிப்படையில் நோக்குமிடத்து செண்பகப் பெருமாள் யாழ்ப்பாண தேசத்தவரின் சமய வழிபாட்டு மரபுகளும் மொழி வழக்கிற்கும் ஏற்றவகையில் தனது பதவிக்கும் அதிகாரத்துக்கும் உரிய சின்னங்களை அமைத்து கொண்டார் என்பது தெளிவாகிறது.

வாகனங்கள்
இக்கோயிலில் உள்ளது போல் பல வகையான வாகனங்கள் இலங்கையின் பிற கோயில்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும் . அதேபோல் ஒவ்வொரு திருவிழாவின் போதும் ஒரு வண்ணம் முதன்மை படுத்தப்படும் அந்நாட்களில் ஒரே வண்ணத்தில் இறைவனின் ஆடைகளும் பூஜை செய்வோரின் ஆடைகளும் இருக்கும்.
திருவிழாவிற்கு முன் கோயில் முழுமையாக சுத்தம் செய்யப்படும் அதன்பின் பைரவர் கோயிலில் எல்லா பகுதிகளையும் சுற்றி வந்து சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறதா? என்பதை சோதிப்பார். இம்மரபு நெடுங் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது இக்கோயிலில் செய்யப்படும் அலங்காரங்கள் கண் கொள்ளாமல் காணும் சிறப்பு பெற்றவை.
அலங்காரம் செய்வதில் ஈடுபடும் குருக்களும் அதிகாரிகளும் நாளும் புதிய புதிய விஷயங்களை சேர்த்து நாளும் மெருகூட்டி வருகிறார்கள். இதனால் கந்தப் பெருமானை அலங்கார கந்தன் என்று பக்தர்கள் அழைத்து மகிழ்கிறார்கள்.
இக்கோயிலின் சிறப்பு வரலாறும் திருவிழாக்களும் எழுத்தில் வடிக்க முடியாத வண்ணம் விரிவானது நல்லூர் கந்தனை நேரில் கண்டு தரிசித்தால் வேண்டியதெல்லாம் கிடைக்கும் என்பதை உணரமுடியும். கந்தனை சிந்தனை செய்து வந்தனை கூறுவோம்.