spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசுற்றுலாசுற்றுலா தின ஸ்பெஷல்: கேவிபி எழுதும் புதிய சுற்றுலா தொடர்!

சுற்றுலா தின ஸ்பெஷல்: கேவிபி எழுதும் புதிய சுற்றுலா தொடர்!

- Advertisement -
kvb tourism series

பயணம் – முதல் பகுதி

அததோ குமக்கட் ஜிக்ஞாஸ:

          நம்முடைய நண்பர் ஜெயகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்னர் “அததோ நியூஸ்” என்ற யூ ட்யூப் சேனல் நடத்தி வந்தார். அந்த நியூஸ் சேனலில் சில நாட்கள் தமிழில் அவர் தந்தச் செய்தித் துணுக்குகளை ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்து, அதனை என் குரலில் ஒலிக்கோப்புகளாகப் பதிவுசெய்து அவருக்கு அனுப்புவேன். சில நிமிடங்களில் அது அவரது யூ ட்யூப் சேனலில் உடனே வெளியாகும். நான் அதனை என் நன்பர்களுக்கு வாட்சப் மூலமாகவும் முகநூல் மூலமாகவும் பகிர்வேன்.

          அதிலே ஒரு நண்பர் ‘அததோ’ என்றால் பொருளென்ன எனக் கேட்டார். அவர் அந்தக் கேள்வியைக் கேட்டதும் எனக்கு நினைவுக்கு வந்தது ராகுல சாங்கிருத்யாயன் எழுதிய ஒரு கட்டுரையில் ‘அததோ குமக்கட் ஜிக்ஞாஸ:’ என்ற வரிதான். ஆனால் நம்முடைய நண்பர் ஜே.ஜேயிடம் ‘அததோ’ என்றால் என்ன எனக் கேட்டேன். அவர் அதற்கு ‘ப்ரும்ம சூத்ரத்தின்’ முதல் வரியிலிருந்து எடுத்ததாக அவர் கூறினார். ப்ரும்ம சூத்ரத்தின் முதல் வரி ‘அததோ ப்ரும்ம ஜிக்ஞாஸ:’. இதன் பொருள் என்னவென்றால் ‘இனி ப்ரும்மத்தைப் பற்றிய விசாரணை ஆரம்பமாகிறது’ என்பதாகும்.

          இதனை ‘ராகுல சாங்கிருத்யாயன்’ தனது கட்டுரையில் ‘அததோ குமக்கட் ஜிக்ஞாஸ:’ என்று பயன்படுத்துகிறார்.  இந்தக் கட்டுரை ஒவ்வொருவரும் சுற்றுலா அல்லது பயணம் ஏன் செய்ய வேண்டும் என்பதைப் பற்றிக் அவர் குறிப்பிடுகிறார். அவர் உத்தரப்பிரதேசத்தில் பிறந்தவர். ஆனால் இந்தியா முழுவதும் சுற்றியவர். தமிழகத்தில் சில வருடங்கள் இருந்தவர். இலங்கையில் சில ஆண்டுகள் இருந்தவர். ருஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்குச் சென்றவர்.

          இன்று ஒவ்வொரு மொழியிலும் பயண இலக்கியம் என்ற துறை நங்கு வளர்ந்து வருகிறது. இராமாயணம், மகாபாரதம் போன்றா இதிகாசங்களில் கூட இராமன், அர்ச்சுனன், பலராமன் ஆகியோரின் பயணங்கள் விவரிக்கப் பட்டுள்ளன. ஹோமரின் இலியட், ஒடிஸி இரண்டும் பயணத்தை அடிப்படையில் எழுதப் பட்ட காவியங்கள். பல மொழிகளில் பயணங்கள் அடங்கிய சாகசக் கதைகள் உள்ளன.

          தமிழில் பயண இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளர்கள் என ஏ.கே. செட்டியார், சோமலே, மணியன், நெ.து.சுந்தரவடிவேலு ஆகியோரைச் சொல்லலாம். இன்னும் பலர் உள்ளார்கள். எனக்கும் பயணங்கள் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. நமது அன்பிற்குரிய ‘தினசரி’ மின்-நாளிதழின் ஆசிரியர் திரு செங்கோட்டை ஸ்ரீராம் அவர்கள் அளித்த ஊக்கத்தில் என்னுடைய பயணங்கள் பற்றிய ஒரு தொடரை எழுத நான் முயற்சி செய்கிறேன்.

          நான் பயண இலக்கியங்கள் படைக்கத் தகுதியானவனா என்ற கேள்வியை நான் முதலில் என்னிடத்தில் கேட்டுக்கொண்டேன். என்னுடைய தகுதிகள் மிக, மிகக் குறைவு. பயணம் செய்பவர்கள் பயணம் செய்யும் பகுதிகளில் நீண்ட நாள் தங்குவர். அந்தப் பகுதியின் மக்களோடு பழகுவர். அந்தப் பகுதியின் உணவு வகைகளை உண்பர். பொது போக்குவரத்தில் பயணம் செய்வர். ஆனால் நான் அவ்வாறு பயணம் செய்யவில்லை.

          நான் அரசுப் பணியில் இருந்தேன். அதனால் அதிக நாள்கள் விடுப்பு எடுக்க இயலாது. எனவே பொதுப் போக்குவரத்தினை நான் பயன்படுத்த இயலவில்லை. ஒரு குறிப்பிட்ட கால நேரத்திற்குள் பயணத்தை முடிக்க வேண்டும் என்பதால் உணவு விஷயத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன். பயணம் செய்யும் பகுதிகளில் சாலையோரங்களில் கிடைக்கும் உணவை உண்பதற்கு முன்னர் பல முறை யோசிப்பேன்.

          இருப்பினும் நான் என் சிறு வயதிலிருந்தே பல பயணங்கள் செய்துள்ளேன். என்னுடைய தந்தையார் மறைந்த திரு கே.எஸ். வைத்தீஸ்வரன் அவர்கள் இரயில்வேதுறையில் பணிபுரிந்தவர். எனவே அவர் எங்கள் குடும்பத்தினரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

          இவ்வளவு குறைகள் என்னிடம் இருந்தாலும் என்னுடைய பயணங்கள் பற்றி என்னுடைய ஆசையால் எழுதுகிறேன். கம்பன் சொல்லியது போல 

ஓசைபெற்று உயர்பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் –

வாருங்கள் என்னோடு பயணிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe