பாலைவனத்தின் ஒரு வைரக் கிடங்கு! பால்நிலாவில் பதுங்கிய எரிமலை!

பயணம் என்றால் பொதுவாக ஒன்றை மட்டும்தான் கவனிப்போம்..

அங்கு இயற்கையோடு கலந்து, கண்ணுக்குக் குளிர்ச்சியாக மட்டுமில்லாமல், மனதுக்கு சுகமாகவும் இருக்குமா என்றுதான் பாப்போம் !!..
நம் நாட்டைப் பொறுத்தவரை பயணம் இனிமையான ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே…
நானும் அப்படிதான். ஆனால் த்ரில் குறைவுதான். யார் நினைத்தாலும் வந்து பார்க்க முடியாத இந்த இடத்திற்கு வந்தது கடவுளின் வரப்ரசாதம்என்று தான் சொல்ல வேண்டும். அப்படித்தான் நானும் உணர்கிறேன்!

உலகில் பல இடங்களைச் சுற்றி வந்திருந்தாலும், இந்த ஒரு இடத்தைப் பற்றி மட்டுமே என் மனது அவ்வளவு ஆழ்ந்திருந்தது, அதை எழுதவும் தூண்டியது. அது பலர் கண்களுக்கு வெறும் மண்ணும் கல்லுமாகத்தான் தெரியும். ஆனால் அதுதான் நம் உடம்பின் மூலக்கூறுகள் ஒன்று சேர்ந்த உருவம் என்பதை எத்தனை பேர் அறிந்திருப்பார்கள்?
நான் வசிக்கும் சவுதி அரேபியாவில், இந்தப் புகழ் வாய்ந்த ” அல் வாபா எரிமலையை ” “al-wahba crator” பற்றி அறிய வாய்ப்பு வந்ததும், அதைக் காண்பதற்காக, நான் இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 363 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்துக்குச் செல்ல ஆயத்தமானேன். அந்த இடத்துக்குச் செல்ல 6 மணி நேரம் பயணம் செய்ய வேண்டிவரும் என்பது பற்றி அறிந்தேன்.

அடுத்து ஆர்வம் மேலோங்க, ஜெட்டாவில் இருந்து நால்வராக கிளம்பினோம் வழிநெடுகிலும் மண் குன்றுகள் வித விதமன வடிவங்கள் மட்டும் அல்லாமால், பல்வேறு வடிவங்களில் கற்கள், பழுப்பு மலைகளின் நடுவே ஒரு வெள்ளை நிறத்தில் பனி படர்ந்தது போன்று ஒரு வெள்ளை குன்று மலை. காண்பதற்கே மிகவும் அதிசயமான காட்சியாக அது இருந்தது.

வெகு தொலைவு கடந்ததும் இடையில் திடீர் என்று மணல் படுகை…. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை ஓவியம் போல், தண்ணீர் ஓடை இருந்தால் எவ்வளவு அருமையாக இருக்குமோ அது போல்… நினைத்த போதே அருகருகே சிறிய குட்டைகளைக் கண்டதும் ஆச்சரியம் அதிகரித்தது.

வெகுதொலைவில் அந்தக் கானல் நீரைக் கண்டதும், ஏற்பட்டிருந்த தாகமும் போய் விட்டது, திடீர் என்று ஒரு பிரேக். கார் கொஞ்சம் சற்றே குலுங்கியது. காரணம் என்னவென்று சற்று எட்டிப் பார்த்ததில், கருப்பு நிறத்தில் அதுவும் ஒரு குட்டிக் குன்று அளவிற்கு வானைத் தொடும் அளவிற்கு என்று கூட சொல்லலாம்… கரு கருவென ஒட்டகங்கள் மெல்ல மெல்ல எந்த விதமான பதற்றமும் இல்லாமல் சாலையைக் கடந்தன. அவ்வாறு அவை சென்ற விதமே அலாதி அழகுதான்!!

இவற்றையெல்லாம் கண்டுகொண்டபடியே, அந்த எரிமலையைக் காண காரை விட்டு இறங்கினோம். இரண்டு கிலோ மீட்டர் அகலம் கொண்டு, 800 அடிக்கு ஆழம் கொண்டு, உப்பு படிந்து, உறைந்த நீரைக் கண்டதும் ஒரு அரை மூடித் தேங்காயின் வடிவம்தான் மனதில் தோன்றியது. மனது அதன் அழகிலேயே ஊஞ்சலாடியது.
பல்லாயிரக்கான வருடத்துக்கு முன்பு ஒரு எரி மலை குமிறி..க் குமுறி… தன் அடையாளத்தை விட்டுச் சென்றிருக்கிறது.

அதை நேரில் காண வாய்ப்பு நேர்ந்திருந்தால்… நாம் அடையாளம் இல்லாமல் போய் இருப்போம். ஆனால் இந்த உண்மை அடையாளத்தைக் காண முடிகிறது

இதைத்தான் அதிசயம் என்றுதான் சொல்ல நினைத்தேன்!!. இப்போது இதைக் காணும் போது கொஞ்சம் எட்டிப் பார்த்தால் பயமே மேலோங்குகிறது. சற்றே அதன் முனையில் நின்றால், மண் நம்மைச் சறுக்கி அதன் ஆழ்ந்த புதைகுழியில் புதைத்து விடும் அளவுக்கு அந்த மண்ணுகு அத்தனை ஆக்ரோஷமான சக்தி.

ஒருவாறு சுதாரித்து வர ஒரு வாரம் ஆகலாம். இதில் இறங்கி நடக்கலாம் என்றார்கள். ஏற்கெனவே கடும் குளிர். கீழே இறங்கி மேலே வருவதற்குள் வெடித்துவிடும் என்று விளையாட்டுக்குச் சொன்னேன் ..

போகலாமா என்று சைகை செய்யவே, என் தோழி என்னை பலவந்தமாகப் போக விடாமல் தடுத்துவிட்டாள். எனினும் எரிமலையைத் தொட்ட பரவசத்தில் சித்தமானேன்

சென்ற வருடம் நான் வசிக்கும் இடத்தில் இருந்து, ஒரு தொலைநோக்கி வைத்து நிலாவில் இருக்கும் எரிமலையைப் பார்க்க சொன்னார்கள். என்ன அதிசயம்???

என் கண்களுக்கு அவை நிலவுக்கு ஒரு மச்சம் போல் அல்லாவா தோற்றம் அளித்தது!!
கொஞ்சம் இப்படி யோசித்துப் பார்த்தேன்… சரி நிலவுக்குச் சென்று இந்த எரிமலையைப் பார்த்தால் எப்படி இருந்திருக்கும் என்று?..

சந்தேகமே இல்லை… ஒரு வைரக் கிடங்கு போல் காட்சி அளித்திருக்கும்!!

பாலைவனத்தில் ஒன்றும் இல்லைதான். இல்லாதது போல்தான் இருக்கும். ஆனால் காணக் கண் கோடி வேண்டும் ..
என்ன .. நம் கண்களைக் கொஞ்சம் உற்று நோக்கினால் நிலவுகூட கைக்குள் வந்துவிடும்..
அவன் கண்ணும் திறந்து அருள் தர வேண்டும்… இல்லாவிடில் சாத்தியப்படாது.
அது, எல்லாருக்கும் அமைய மனதார பிராத்திக்கிறேன்.

 

பயண அனுபவம்: பத்மினி ராஜன், ஜெட்டா (https://www.facebook.com/padmini.rajan?fref=ts)