செங்கோட்டை என்றால் நினைவுக்கு வருவது குற்றாலம். குற்றாலம் என்றால் நினைவுக்கு வருவது குளியல். அதற்கு மேல் கும்மாளம் என நிறைய இருக்கலாம்.

ஆனால் எனக்கு செங்கோட்டை என்றதும் நினைவுக்கு வந்தது செங்கோட்டையில் இருந்து தென்மலை, புனலூர் வழியாக கொல்லம் செல்லும் ரயில்தான். இந்த ரயிலில் பலர் பயணித்திருக்கலாம். ஆனால் அதில் பயணம் செய்யாதவர்களுக்காக இந்த வீடியோ பதிவு.

114 வருடங்களுக்கு முன்பு அதாவது 1904-ம் ஆண்டு மீட்டர் கேஜ் (Meter gauge) பாதையில் தொடங்கப்பட்டு ஓடிக்கொண்டிருந்த இந்த ரயில் போக்குவரத்து கடந்த 2007-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

பின்னர் செங்கோட்டையில் இருந்து புனலூர் வரை அகல ரயில் (Broad gauge) பாதை அமைக்கும் பணி நடைபெற்று தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டில் தான் ரயில் போக்குவரத்து தொடங்கியது. (2010-ம் ஆண்டிலேயே கொல்லத்திலிருந்து புனலூர் வரை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுவிட்டது).

மலைகளுக்கு நடுவே ரயில் பாதை உள்ளதால் செங்கோட்டை-தென்மலை- புனலூர் வழியாக கொல்லம் செல்லும் ரயில்கள் வளைந்து, நெளிந்து செல்கிறது. பல இடங்களில் கும்மிருட்டாக காட்சியளிக்கும் குகைகளுக்குள் ரயில் நுழைந்து செல்கிறது. அந்த குகைகளுக்குள் இருட்டாக இருப்பதால் Solar Lights பொருத்தப்பட்டுள்ளது.

ரயிலின் என்ஜின் பகுதி மேற்கு திசையை பார்த்த மாதிரி சென்று கொண்டிருந்தால் அதே ரயிலின் கடைசி பெட்டி தெற்கு திசையை பார்த்தபடி செல்வதை காணலாம். இப்படி S வடிவத்தில் ரயில் பாதை இருப்பதால் ரயில் மெதுவாக செல்கிறது. இதனால் அடிக்கடி பிரேக் சத்தம் கீச், கீச் என கேட்டுக் கொண்டே இருக்கும்.

செங்கோட்டையில் இருந்து கொல்லத்துக்கு சுமார் 3.30 மணி நேரம் பயணம் என்றால் அதில் 2 மணி நேரம் மிகவும் குறைந்த வேகத்தில்தான் செல்கிறது.

வண்டி…வண்டி ரயிலு வண்டி என ஒரு சினிமா பாடல் வருமே… அந்த பாடல் காட்சியில் வரும் 16 கண் பாலம் இந்த ரயில் பாதையில் தான் உள்ளது. அந்த பாடல் காட்சி எடுக்கும் போது Meter gauge பாதையாக இருந்துள்ளது. தற்போது இந்த பாலம் அகலப்படுத்தப்பட்டுள்ளது.

பசுமை நிறைந்த சோலைகளுக்குள் இந்த ரயிலில் செல்லும் போது ஆங்காங்கே விண்ணை தொடுவது போல் காட்சியளிக்கும் மலைகள், அந்த மலைகளை தொட்டு செல்லும் மேகங்கள், ஆங்காங்கே கொட்டும் அருவிகள் என பார்ப்போரின் பயணத்தை பரவசப்படுத்தும்.

செங்கோட்டை-புனலூர்-கொல்லம் மார்க்க ரயில்களின் வீடியோவை YouTube-ல் நிறைய காணலாம். ஆனால் கொட்டும் மழையில் ஓடும் ரயிலையும், ஓடும் ரயிலில் இருந்து கொட்டும் மழையையும் பார்த்திருக்க முடியாது. அந்த காட்சிகளை இந்த வீடியோவில் காணலாம்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...