சென்னை: அதிமுக., மொத்த உறுப்பினர்கள் 1 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 உறுப்பினர்கள் என்றும், விரைவில் இரண்டு கோடியைத் தாண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக., பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா இருந்தபோது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் எண்ணிக்கை 1.5 கோடியாக உயர்ந்தது. தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் இல்லாத வகையில் 1.5 கோடி உறுப்பினர்களுடன் அ.தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக தனித்துவத்துடன் செயல்பட்டு வந்தது.
அவரின் மறைவிற்கு பின்பு அதிமுக கழக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக கே.எடப்பாடி பழனிசாமி பதவி வகித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் இணைந்து, அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினார்கள். அ.தி.மு.க. உறுப்பினர்கள் தங்களது அட்டைகளை புதுப்பித்துக் கொள்ள விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடைபெற்ற பணிகளின் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக., தலைமையகத்தில் புதிய உறுப்பினர்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை, ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் , கழக அவை தலைவர் மதுசூதனன் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் பேசியபோது, ஒன்றரை கோடிக்கும் அதிகமான மாபெரும் தொண்டர்கள் இயக்கத்தை உருவாக்கியவர் ஜெயலலிதா! தற்போது தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்று செயல்பட்டு வருகின்றனர். எனவே இரட்டை குழல் துப்பாக்கியாக கழக இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஸ் ஆகியோர் இந்த இயக்கத்தை காத்துவருகின்றனர் என்றார்.



