நீ எந்த பத்திரிகை? எந்த ஊடகம்? இப்படி எல்லாம் கேட்க சொல்லி அனுப்பி வெச்சாங்களா? ஏன் இதை அங்க போய் கேட்கலாமே! இதை ஏன் அந்த அம்மையாரிடம் கேட்கவில்லை!?
– இப்படியும் இதற்கு மேலும், செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தனிப்பட்ட வகையில் நிருபர்களை அடையாளம் காண்பது, அடையாளம் காண வைப்பது, நிருபர்களிடமே அரசியல் விளையாட்டு மேற்கொள்வது, நிருபர்களை அரசியல் ரீதியாக பிரிப்பது, தனிப்பட்ட வகையில் பெயரைக் கேட்டு, அச்சுறுத்துவது… என திமுக., தலைவராகவும் தமிழக முதல்வராகவும் இருந்த மு.கருணாநிதி செய்த கழிசடைத்தனம் எண்ணிலடங்கா. இப்போது அந்த வியாதி புதிய அரசியல்வாதி டிடிவி தினகரனுக்கும் தொற்றிக் கொண்டிருக்கிறது!
அண்மையில் டிடிவி தினகரனும் மு.க.ஸ்டாலினும் ரகசியமாக சந்தித்துக் கொண்டனர் என்ற ரீதியில் ஒரு செய்தியை, போட்டி அரசியல் கட்சி இதழ் வெளியிட, அது தொடர்ந்து 24 மணி நேர பொழுது போக்கு டிவி., செய்தி சேனல்களில் விவாதப் பொருளாக எடுக்கப்பட… விவாதத்துக்கு உரியவரான டிடிவி தினகரன் கடும் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியபோது,
தொலைக்காட்சியில் விவாதம் செய்யும் அளவுக்கு இது ஒரு விஷயமா? அது, ஒரு பத்திரிகைன்னே யாருக்கும் தெரியாது, நீங்க நமது பாட்டி, கொள்ளுப்பாட்டி சொல்றதை எல்லாம் நம்பிக்கிட்டு விவாதம் செய்யிறீங்க… என்று கேலி செய்கிறார் டிடிவி.
நான் மதிக்கும் தொலைக்காட்சியில் ஒரு விவாதம்னு இதை நடத்துறீங்க! விவாதத்துக்கு எவ்வளவோ விஷயம் இருக்கு.. இதுவெல்லாமா ஒரு விஷயம்!
புதிய தலைமுறைக்கு வெச்சிருக்கேன்… இருங்க சுபாஷ்.. என்று டிவி நிருபரை பெயர் சொல்லி… தனிமைப்படுத்துகிறார்!
விவாதம் செய்தால், ரபேல், அடிமை ஆட்சி, ஒபிஎஸ் பிரதமர் சொல்லிதான் சேர்ந்தார் என்றெல்லாம் விவாதம் செய்யுங்க என்று அறிவுரை கொடுக்கிறார் டிவி நிறுவனத்துக்கு!
மேலும், திருவண்ணாமலை அர்ப்பணா ஹோட்டலில் தங்கியிருந்தபோது… பாஜக., தமிழக தலைவர் தமிழிசை அங்கே தங்கியிருந்தார். அப்போது யாரும் இது ஒரு ரகசிய சந்திப்பா என்று கேட்கவில்லையே என்று ஆதங்கப்படுகிறார்.
எதையோ கதை கட்டிவிட்டு, சொல்லப் படுகிறது வாங்கப்படுகிறது என்று என்ன சொல்ல வேண்டியிருக்கிறது? திருட்டுத்தனமாக நான் யாரையும் சந்திக்க வேண்டிய தேவையில்லை. யாராய் இருந்தாலும் பொதுவில் சந்திப்பேன்.. ஒருவரை பார்ப்பதாலேயே கற்பு போய்விடாது… அதாவது நீங்கள் சொல்வது போன்ற, அரசியல் கற்பு போய்விடாது.
நீங்களே தரத்தை தாழ்த்திக் கொள்ளாதீர்கள் என்று கூறும் டிடிவி., நிருபர் ஒருவர் தூத்துக்குடி விவி மினரல்ஸ் ரூ. இரண்டரை கோடி ஆர்.கே.நகர் தேர்தல் நேரத்தில் கொடுத்தார்கள் என்று கூறப்படும் செய்தி குறித்து கேட்கிறார். அதற்கு அவர், எனது டிவிட்டர் பதிவினை பார்க்கவில்லையா .. அதிலேயே போட்டிருக்கேனே..! என்ன பத்திரிகை நீங்க..? என்கிறார்.
அதற்கு அந்த நிருபர், நியூஸ் ஜே எனச் சொல்ல, நியூஸ் ஜேல உள்ளவங்க டிவிட்டர் பாக்கலைன்னா எப்படி..? நீங்க எப்படி ரிப்போர்ட்டரா இருக்கீங்க?! என்று தகுதியைக் குறித்து கேள்வி எழுப்புகிறார்…
தொடர்ந்து, வேறொரு கேள்விக்கு, நீங்க என்ன தொலைக்காட்சி..? என்று கேட்க, அதற்கு அவர், தந்தி டிவி சார்… என்கிறார்.
அவருக்கு பதிலளிக்கு டிடிவி., உங்க நிருபருக்கு மதுரையிலே பதில் கொடுத்து தனியாக சிடில்லாம் அனுப்பிவெச்சேன்… கத்துக்குட்டிகளுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று சொன்னேன்.. முதல்ல நான் சொல்ல அந்த பதிலை போடுங்க பிறகு சொல்கிறேன்… என்கிறார் டிடிவி.
இன்னொரு கேள்வி கேட்கப் பட்டபோது, உங்க சேனலுக்கு அரசு இதை எல்லாம் கேளுங்க உங்களுக்கு விளம்பரம் தர்றோம்னு பேரம் பேசியிருக்கறதா சொல்றாங்களே.. அது உண்மைன்னா இதுவும் உண்மை என்கிறார்.
நிருபர்களுடன் ஏதோ ஹோட்டலில் டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டு தனிப்பட்ட முறையில் பேசுவது போல், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கையாளும் டிடிவி.,யின் இத்தகைய போக்கு மாற வேண்டும்! தனிப்பட்ட முறையில் செய்தியாளர்களை சுட்டிக் காட்டி, அடையாளப் படுத்தும் கருணாநிதியின் பாணி, அவருடன் சேர்ந்து சவக்குழியில் மூடப் பட்டாக வேண்டும்!