ட்ரம்பின் மகள் கொண்டாடும் தீபாவளி

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள இந்துக்களும் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள மக்களுடன் இணைந்து உற்சாகமாக இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர். வெளிநாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களும் இப்பண்டிகையில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.

அவ்வகையில், அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப், விர்ஜினியா மாநிலத்தில் உள்ள இந்துக் கோயிலில் தீபாவளியை கொண்டாட உள்ளார். அவர் சான்டில்லியில் உள்ள ராஜ்தானி கோயிலுக்கு புதன்கிழமை (அக்.,26) செல்லும்போது, அங்குள்ள இந்திய-அமெரிக்க சமூக உறுப்பினர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாட உள்ளதாக அவரது பிரச்சாரக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்களில் முன்னிலையில் உள்ள வேட்பாளரின் குடும்பத்தினர் இந்து கோயிலுக்கு செல்வது இதுவே முதல் முறை.

கடந்த வாரம் குடியரசு இந்து கவுன்சில் சார்பில் காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் வங்கதேசத்தில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்துகொண்டார். இந்திய-அமெரிக்க நிகழ்ச்சியில் அதிபர் வேட்பாளர் கலந்துகொண்டதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது