சீருடைக் குழப்பம்: சச்சின் மெழுகுசிலை சிட்னி அருங்காட்சியகத்தில் இருந்து அகற்றம்

sachin-wax-statue-sydney சிட்னி: இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மெழுகுச் சிலை சிட்னி அருங்காட்சியகத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. சீருடைக் குழப்பமே அதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. பிரபலஸ்தர்களின் முழு உருவ மெழுகுச் சிலைகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேடம் டுஸாட்ஸ் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மியூசியத்தில் பல துறைகளைச் சேர்ந்த இந்திய பிரபலங்ளின் சிலைகளும் உள்ளன. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சிலையும் இங்கு வைக்கப்பட்டது. சிட்னி நகருக்கு சுற்றுலா செல்லும் பலரும் சச்சினின் முழு உருவ மெழுகுச் சிலையின் அருகில் நின்று புகைப்படம் எடுத்தனர். இந்நிலையில், சச்சினின் 40 ஆவது வயதுக்கு சில தினங்களுக்கு முன்னர் அந்தச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. அதற்குக் காரணம், அந்தச் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த சீருடைதான். அந்த சிலைக்கு உலகக் கோப்பை T20 போட்டியின்போது வீரர்கள் அணிந்திருந்த சீருடை அணிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் சச்சின் T 20 போட்டியில் விளையாடியாடவில்லையாம். இந்த விவரம் அமைப்பாளர்களுக்குத் தெரிய வந்ததை அடுத்து, அந்தச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு பாங்காக் நகருக்கு கொண்டு செல்லப்பட்டதாக மேடம் டுஸாட்ஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர.