
கொரோனா நோய்த்தொற்று குறித்த ஆய்வில் ஈடுபட்டு வந்த பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியர் டாக்டர் பிங் லியூ(37) மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் சீனாவைச் சேர்ந்தவர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் தெரிவித்தாவது:
பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் பிங் லியூ, வார இறுதி நாளான சனிக்கிழமை பிற்பகலில் ரோஸ் டவுன்ஷிப்பில் உள்ள அவரது வீட்டில் தனியாக இருந்த போது, ஹாவோ கு(46) என அடையாளம் காணப்பட்ட நபர், வீட்டின் திறந்திருந்த கதவு வழியாக நுழைந்து லியூ மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், லியூ தலை, கழுத்து மற்றும் உடற்பகுதியில் குண்டுகள் பாய்ந்து காயங்களுடன் இறந்தார்.
கொரோனா தொற்று பரவல் தொடர்பான மிக முக்கியமான ஆய்வில் ஈடுபட்டு வந்த லியூ, ஆய்வு முடிவுகள் முடியும் தருவாயில் இருந்த நிலையில், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
லியூவை சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் தனது கார் நிறுத்தப்பட்டிருந்த சார்லமேன் பகுதிக்கு திரும்பி வந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டதாகவும், இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என நம்புவதாகவும், ஆனால், லியூ சீனாவைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது குறி வைக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் லியூவின் வீட்டில் இருந்து எந்த தடயங்களும் கைப்பற்றப்படவில்லை, இந்த சம்பவத்தால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அவரது மனைவி வீட்டில் இல்லை என்றும் தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை.
சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட லியூ, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளங்கலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். பின்னர் பிட்ஸ்பர்க்கில் உள்ள புகழ்பெற்ற கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டார்.
லியூ கணக்கீட்டு மற்றும் கணினி உயிரியல் துறையில் ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர், ஆராய்ச்சி துறையில் பலரின் மரியாதையையும் பாராட்டையும் பெற்றவர், மேலும் அறிவியலுக்கு தனித்துவமான பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒரு சிறந்த ஆராய்ச்சியாளராகவும் இளைஞர்களால் நன்கு மதிக்கப்படும் வழிகாட்டியாகவும் புகழப் பெற்றவர்.
டாக்டர் பிங் லியூ கொரோனா தொற்று மற்றும் செல்லுலார் வழிமுறைகளை நன்கு புரிந்துகொள்வதற்கான ஆய்வில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.