
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பணை நிலையங்களிலும் மாஸ்க் அணிந்து வருபவர்களுக்கு பெட்ரோல் வண்டிகளில் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை நகரை பொறுத்தமட்டில் அண்ணாநகர், அரசரடி, காளவாசல், விளாங்குடி, பரவை ஆகிய நகர் பகுதிகளில் செயல்படும் பெட்ரோல் நிலையங்களில் மாஸ்க் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், சோழவந்தான் போன்ற சிறு நகரங்களில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இடைவெளி, மாஸ்க் இல்லாமல் சகஜமாக மக்கள் வருவதை காணமுடிகிறது.
இங்குள்ள போலீஸார், கிராம மக்களுக்கு சில தளர்வுகளை அளித்தது போல தோன்றுகிறது. பலர் இப் பகுதிகளில் மாஸ்க் இல்லாமல் தெருவில் நடமாடுவதையும் இன்று காண முடிந்தது.
சோழவந்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அனைத்து கடைகளும், முடிதிருத்தகம் கடையை தவிர செயல்பட்டன. திருவேடகம், தேனூர் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் மதுப்பிரியர்கள் பாட்டில்களை வரிசையாக நின்று வாங்க தடுப்புகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், ஆங்காங்கே மாஸ்க் அணிந்து வரவேண்டும் என, வாசகங்களும் எழுதி வைக்கப்பட்டிருந்தன.
சோழவநாதான் தெற்கு ரதவீதியில் உள்ள நியாய விலைக்கடையில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர்.மதுரை நகர் பகுதியில் பெரிய கடைகளை திறக்க வணிகர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். கிராமங்களை பொறுத்த மட்டில் சகஜ வாழ்க்கை திரும்பியுள்ளது. விவசாயப் பணிகளுக்கு கிராம மக்கள் பல கிலோ மீட்டர் நடந்தே செல்கின்றனர்.
- செய்தியாளர்: ரவிச்சந்திரன், மதுரை