
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடைசி நபர் குணமடைந்ததோடு, புதிதாக பாதிப்பு எதுவும் பதிவாகாத நிலையில் கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து மாறியுள்ளது.
தெற்கு பசிபிக் நாடான நியூசிலாந்தில் கடந்த பிப்.28ம் தேதி முதன்முறையாக கொரோனா தொற்று பாதிப்பு பதிவானது. 5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் 1,154 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 22 பேர் உயிரிழந்தனர். 1,482 பேர் குணமடைந்தனர்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 7 வாரங்கள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கடந்த மே 14ம் தேதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. கடந்த 17 நாட்களில் புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை.
கடந்த ஒரு வாரமாக 50 வயது மதிக்கத்தக்க ஒரே ஒரு பெண் நோயாளி மட்டுமே சிகிச்சை பெற்று வந்துள்ளார். நோயாளி குறித்த தகவல்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டுமென்பதால் விவரத்தை வெளியிடவில்லை.
நியூசிலாந்து சுகாதாரத்துறை இயக்குனர் ஆஷ்லே புளூம்பீல்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த மைல்கல் உண்மையில் நல்ல செய்தி. ஒட்டுமொத்த நியூசிலாந்தின் இதயத்தில் இருந்து நிகழ்த்தப்பட்ட சாதனை. பிப்.28ம் தேதிக்கு பிறகு முதன் முறையாக கொரோனா நோயாளிகளும் இல்லையென்பது எங்கள் பயணத்தின் குறிப்பிடத்தக்க அடையாளம்.
ஆனால் நாங்கள் முன்னரே கூறியப்படி, கொரோனா தொற்றுக்கு எதிரான விழிப்புணர்வை தொடர்வது அவசியம்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நியூசிலாந்து நான்கு கட்ட ஊரடங்கு தளர்வில் கடைசியான குறைந்த பாதிப்பு நிலை ஒன்றுக்கு செல்வதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்தார்.’ உலகளாவிய தொற்று நோய்க்கு மத்தியில் வாழ்க்கை இயல்பானதாக உணர்கிறது. இப்போது நாம் நிலை 1 க்கு செல்ல அமைச்சரவை ஒப்புகொண்டுள்ளது’ என கூறினார்.
மேலும் பொதுமக்கள் கூடுவதற்கும், சமூக விலகல் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகிறது. அனைத்து வாகனங்களும் இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு மட்டும் கட்டுப்பாடுகள் தொடர்வதாக தனது உரையில் அவர் தெரிவித்தார்