
டிவிட்டரை இங்கும் தடை செய்யுங்க என்ற குரல்கள் இந்தியாவில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. நைஜீரியாவில் அந்நாட்டின் அதிபர் இத்தகைய தடை அறிவிப்பை வெளியிட்ட பின்னர், இந்தியாவிலும் இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது.
பாரதத்தின் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஆர்எஸ்எஸ்., அமைப்பின் தலைவர் மோகன்ஜி பாகவத் உள்ளிட்டோரின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கில் இருந்த ‘புளூ டிக்’ நீக்கப்பட்டது, இந்திய ட்விட்டர் பயனரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இதை அடுத்து ட்விட்டர் நிறுவனத்துக்கு கடும் கண்டனங்களை அதே டிவிட்டரில் பயனர்கள் தெரிவித்தனர். இதனால் டிவிட்டரில் #BanTwitterInIndia #blueTick #TirangaTick ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் ஆயின.
பாரதத்தில் டிவிட்டர் சமூகத் தளம் அதிகம்பேரால் பயன்படுத்தப் பட்டு வருகிறது. பெரும்பாலான விவாதங்கள், தகவல்கள், அரசியல் தலைவர்களின் தொடர்புகள் என டிவிட்டர் தளம் வெளிப்படையான நிர்வாகத்துக்கு உதவியாக உள்ளது என்றாலும், அதன் மூலம் அரசியல் ரீதியான தேசப்பிரிவினைவாத கருத்துகளும், துர்பிரசாரங்களும் அமைதியின்மையும் ஏற்படுவது தவிர்க்க முடியாத அம்சமாகவும் உள்ளது. குறிப்பாக போலியான ஐ.டி.,கள் மூலம் ஏற்படும் பிரச்னைகள் மிகப் பெரிதாக இருக்கிறது.
டிவிட்டர் தளத்தை பயன்படுத்தும் பிரபலங்களின் உண்மையான கணக்குகளை உறுதிபடுத்துவதற்கான அடையாளமாக ‘புளூ டிக்’ வசதியை டிவிட்டர் நிறுவனம் வழங்கி வருகிறது. ஒருவரின் கணக்குக்கு புளூ டிக் தரப்பட்டால் அதை மிகப்பெரும் மதிப்பாக டிவிட்டர் பயனர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் பாரத குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்ஜி பாகவத், ஆர்எஸ்எஸ்-ல் உள்ள பல முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோரின் டிவிட்டர் தளத்தின் புளூ டிக் இன்று (ஜூன் 5) திடீரென நீக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனத்தை டிவிட்டர் பயனர்கள் தெரிவித்தனர். டிவிட்டர் தளத்தில் இந்தியாவில் டிவிட்டரை தடை செய் என்ற குரல் ஒலித்தது. #blueTick #TirangaTick #VPofIndia #mohanbhagwat #BanTwitterInIndia உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் பிரபலம் ஆகின.
இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் டிவிட்டர் கணக்குக்கு மட்டும் மீண்டும் புளூ டிக்கை டிவிட்டர் நிறுவனம் வழங்கியது. இருப்பினும் டிவிட்டர் நிறுவனத்தின் இந்தச் செயலை ஏற்க இயலாது என கருத்து தெரிவித்த டிவிட்டர்வாசிகள், இந்திய அரசு டிவிட்டர் நிறுவனத்துக்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
முன்னதாக, நைஜீரிய நாட்டின் அதிபர் முகமது புஹாரியின் டிவிட்டர் பதிவை அந்நிறுவனம் முடக்கியதால், நைஜீரியாவில் டிவிட்டர் நிறுவனத்தையே முடக்கிவிட்டார் அவர்.
நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்கள் கலகம் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், 1967-70 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டு கலகங்களை மேற்கோள் காட்டி அதிபர் முகமது தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார்.

அப்பதிவில், இன்று தவறான முறையில் நடந்து கொள்ளும் இளைஞர்களுக்கு நைஜீரிய உள்நாட்டு போரில் ஏற்பட்ட இழப்புகள், அழிவுகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 30 மாதங்களாக எங்களுடன் களத்தில் இருந்தவர்கள், போரை சந்தித்தவர்கள், அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியிலேயே அதை நடத்துவார்கள் என்று கருத்து தெரிவித்தார்.
அது போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது தாக்குதலை நடத்தத் தூண்டுவது போல அமைந்திருந்ததால், அதிபர் முகமதுவின் கருத்தை தங்கள் வலைதளப் பக்கத்தில் இருந்து டிவிட்டர் நிறுவனம் நீக்கியது.
இந்நிலையில் அதிபரின் டிவிட்டர் பதிவு நீக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நைஜீரியாவில் டிவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டது. மக்கள் சமூகவலைதளமான டிவிட்டரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நைஜீரியாவில் டிவிட்டர் செயல்பட காலவரையறையற்ற தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு நேற்று அதிகாரபூர்வமாக தெரிவித்தது. இச்சம்பவம் உலக அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதை அடுத்து, இந்தியாவில் டிவிட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் அமைதிக்கும் எதிராக இருப்பதாலும், பொய்யான செய்திகளை ஒருதலைப் பட்சமாகப் பரப்பி அரசியல் ரீதியாக நாட்டை பலவீனப் படுத்துவதாலும் டிவிட்டர் நிறுவனத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அவ்வாறு ஒரு வாரமோ, அல்லது ஒரு மாதமோகூட தடைசெய்யப் பட்டால், அது அந்நிறுவனத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே சீன செயலிகளை முடக்கிய இந்திய அரசு இந்த நடவடிக்கையையும் எடுக்குமா என்பதே இந்திய சமூக வலைத்தளப் பயனர்களின் எதிர்பார்ப்பு.