
கவனக்குறைவால் உயிர்கள் போவதை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் நடைபெற்ற இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
தனது குழந்தையை விளையாட விட்ட தாய், வீடியோவில் பேசிக் கொண்டிருந்தார். வேலை தொடர்பாக அவர் வீடியோ அழைப்பில் மும்முரமாக இருந்தார்.
அப்போது, தளிர்நடை பயிலும் குழந்தைக்கு குண்டுகள் நிரம்பிய கைத்துப்பாக்கியை எடுத்து தாயை சுட்டு விட்டது. வீடியோ வேலை அழைப்பில் இருந்த 21 வயது தாயின் தலையில் குண்டு பாய்ந்தது.
அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே நடைபெற்ற இந்த சம்பவம் அனைவரையும் உலுக்கிவிட்டது. தாயை சுட்ட குழந்தை, அவர் கீழே விழுந்த பிறகும் துப்பாக்கியை கையில் வைத்திருந்தது.
இறந்து விழுந்த பெண்ணுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தவர் நேரலையாக இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ந்துபோனாலும், உடனே சுதாரித்துக் கொண்டு 911 என்ற அவசர உதவி எண்ணை அழைத்து விஷயத்தை சொல்லிட்டார்.
புளோரிடாவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வேலை தொடர்பான வீடியோ அழைப்பில் இருந்த அவளது தாயை, குழந்தை சுட்டுக் கொன்றதாக மத்திய போலீசார் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.
ஷமயா லின் என அடையாளம் காணப்பட்ட அந்த 21 வயதான பெண், தலையில் குண்டு பாய்ந்ததும் பின்புறமாக விழுந்துவிட்டார். அதன்பிறகு அவர் வீடியோ அழைப்புக்கு திரும்பவில்லை என்று, அந்த பெண்ணுடன் வீடியோவில் பேசிக் கொண்டிருந்த நபர் தெரிவித்தார்.
“அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் படுகாயமடைந்த பெண்ணுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர், ஆனால் அவர் தலையில் பாய்ந்த குண்டு உயிரை பறித்துவிட்டது” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமா என்பதும் தெரியவில்லை. இதுதொடர்பான சட்ட விஷயங்களை வழக்கறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
தனி மனிதர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதும், இதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது என்பது கவலையளித்த நிலையில், தற்போது ஒன்றுமே தெரியாத குழந்தையின் கையில் அசல் துப்பாக்கி கிடைத்ததால் ஏற்பட்ட விபரீதம் அனைவரையும் பதறச் செய்திருக்கிறது.
துப்பாக்கி வைத்திருப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ள போதிலும் துப்பாக்கி சூடு சம்பங்கள் குறைந்தபாடில்லை.
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் நாளுக்கு நாள் விசுவரூபம் எடுத்து வருகிறது. இந்த கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடுமையான சட்டம் இயற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், துப்பாக்கி வன்முறையை தடுப்பதற்காக முதற்கட்டமாக சட்ட விரோத கடத்தல் துப்பாக்கி வர்த்தகத்தை ஒடுக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் 5 பணிக்குழுக்களை அமைத்துள்ளார். இந்த குழுக்கள், துப்பாக்கிச்சூடு மற்றும் பிற வன்முறைகளில் பயன்படுத்தப்படும் சட்டவிரோத கடத்தல் துப்பாக்கி விநியோகத்தை தடுப்பதில் முக்கிய பங்காற்றும்.
இவை, நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் ஆகிய இடங்களில் துப்பாக்கி கடத்தலில் தீவிர கவனம் செலுத்தும் என்றும் அந்நாட்டு சட்டத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.