இந்தியா – இங்கிலாந்து ஐந்தாவது டெஸ்ட் மேட்ச்
– இரண்டாம் நாள் – 02 ஜூலை 2022
– K. V. பாலசுப்பிரமணியன் –
இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி 73 ஓவர்களில் 338/7 என்ற ரன் கணக்கோடு தொடங்கியது. ரவீந்தர் ஜதேஜா 83 ரன்களுடனும் ஷமி ரன் எதுவும் எடுக்காமலும் விளையாடிக்கொண்டிருந்தனர். இந்திய அணி சுமார் 12 ஓவர்கள் இன்று விளையாடியது, ஜதேஜா 104 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின் பத்தாவது விக்கெட்டுக்கு வந்த இந்திய அணியின் தலைவர் பும்ரா 84ஆவது ஓவரை மிகப் பிரமாதமாக ஆடினார். முதல் பந்து நான்கிற்குச் சென்றது; அடுத்த பந்து பும்ராவின் தலைக்கு மேலாகச் சென்று பவுண்டரியை அடைந்தது; அந்தப் பந்தில் மொத்தம் 5 ரன்கள்; அடுத்த பந்தினை ப்ராட் நோபால் போட்டார். பும்ரா அதனை சிக்சருக்கு அனுப்பினார்; அதனால் 7 ரன். அடுத்த மூன்று பந்துகள் பவுண்டரிக்கும், ஐந்தாவது பந்து சிக்சருக்கும் சென்றது. ஆறாவது பாலில் பும்ரா ஒரு ரன் எடுத்தார். ஆக, அந்த ஒரு ஓவரில் மட்டும் 35 ரன் எடுக்கப் பட்டது. இது மிகப் பெரும் சாதனை.
இந்திய அணி 416 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.
அதன் பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை ஆட களத்தில் இறங்கியது. மழையின் குறுக்கீட்டால் இங்கிலாந்து அணி 27 ஓவர் மட்டுமே விளையாடியது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக ப்ந்து வீசினர். பும்ரா 11 ஓவர்கள் வீசி, 35 ரன்கள் கொடுத்து 3 விக்கட் எடுத்தார். ஷமியும் சிராஜும் தலா ஒரு விக்கட் எடுத்தனர். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து ஐந்து விக்கட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது.