
இந்தியா-வங்கதேசம் மூன்றாவது ஒருநாள் போட்டி
இந்தியாவுக்குச் சாதனை வெற்றி, இஷான் கிஷன் அடித்த இரட்டைச் சதம்
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இந்திய அணி (409/8, இஷான் கிஷன் 210, விராட் கோலி 113) வங்கதேச அணியை (34 ஓவரில் 182 ஆல் அவுட், ஷாகிப் அல் ஹசன் 43, ஷர்துல் தாகூர் 3/30) 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலிரண்டு போட்டிகளில் ரன் அடிக்கமுடியாமல் திணறி தோல்வியுற்ற இந்திய அணி மூன்றாவது ஒருநாள் போட்டியில் உலகத்திலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் யாரும் தொட முடியாத சாதனைகளைச் செய்துள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பல்வறு சாதனைகள் படைத்திருக்கிறது. வங்கதேசத்திற்கு எதிராக தொடரை இந்திய அணி இழந்த நிலையில், கடைசி பேட்டியில் இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் விதமாக சிறப்பாக செயல்பட்டுள்ளது.
இதன் மூலம் செய்த தவறை இந்திய அணி திருத்தி கொண்டுள்ளது. போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அதிவேக இரட்டை சதம் விளாசி இஷான் கிஷன் சாதனைபடைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 400 ரன்களை அதிக முறை விளாசிய அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் 6 முறை 400 ரன்களும், இங்கிலாந்து 5 முறை 400 ரன்களும் அடித்துள்ளன. ஆஸ்திரேலிய அணி 2 முறை தான் 400 ரன்களை அடித்துள்ளது. இதே போன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 300 சதங்களை விளாசிய ஒரே அணி என்ற பெருமையை இந்தியா படைத்துள்ளது. இந்தியாவின் முதல் சதத்தை கபில்தேவும், 100ஆவது சதத்தை கங்குலியும், 200ஆவது 300வது சதத்தை விராட் கோலியும் பதிவு செய்துள்ளார்.
இதே போன்று வெளிநாட்டில் நடைபெறும் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின் 29 முறை அடித்து முதல் இடத்திலும், விராட் கோலி 25 முறை விளாசி இரண்டாமிடத்தையும் பெற்று அசத்தி இருக்கிறார்கள்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை இரட்டை சதம் அடித்த அணி என்ற பெருமையையும் இந்தியா படைத்துள்ளது. அதிக இரட்டை சதம் இந்திய அணி வீரர்கள் 6 முறை இரட்டை சதம் அடித்துள்ள நிலையில், மற்ற அணி வீரர்கள் எல்லாம் ஒரு முறை மட்டும் தான் அடித்துள்ளனர். ரோஹித் ஷர்மா மூன்று முறை (264, 209, 208), விரேந்திர சேவாக் ஒரு முறை (219), இஷான் கிஷன் இந்த ஒருநாள் போட்டியில் (210), சச்சின் டெண்டுல்கர் ஒரு முறை (200).
இதே போன்று வங்கதேச மண்ணில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற பெருமையையும் இந்திய அணி படைத்துள்ளது. இதே போன்று வங்கதேச அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஆயிரம் ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை கோலி படைத்தார்.