
இந்தியாவில் தற்போது பல முன்னணி ஐடி மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு மிகப்பெரிய அளவிலான முதலீட்டைத் திருட்டி வருகிறது.
ஆனால் யாரும் அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடத் திட்டமிடவில்லை.

அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டுமென்றால் கடுமையான விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மட்டும் அல்லாமல் பல நிர்வாக மாற்றங்களைச் செய்தாக வேண்டும்.
அனைத்து தடைகளையும் தாண்டி திருச்சியைச் சேர்ந்த கிரிஷ் மாத்ருபூதம் 11 வருடத்திற்கு முன்பு உருவாக்கிய FreshWorks மென்பொருள் நிறுவனத்தை இன்று நாஸ்டாக் சந்தையில் பட்டியலிட்டு முதல் நாளே மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்து மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

10 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிட்ட FreshWorks நிறுவனம் முதல் நாளே சிறப்பான வரவேற்பு பெற்ற காரணத்தால் அதிகப்படியாக ஒரு பங்கு விலை 33 சதவீதம் வரையில் உயர்ந்து இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு என்பது 13 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது.
இதுகுறித்து FreshWorks நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான கிரிஷ் மாத்ருபூதம் கூறுகையில், நாஸ்டாக் பங்குச்சந்தையில் முதல் நாளே 33 சதவீத வளர்ச்சியைப் பார்க்கும் போது இந்திய விளையாட்டு வீரர் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கியது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

2010ஆம் ஆண்டுக் கிரிஷ் மாத்ருபூதம் மற்றும் ஷன் கிருஷ்ணசாமி இருவரும் சேர்ந்து நிறுவனங்களுக்கான வாடிக்கையாளர் சேவை மென்பொருளை உருவாக்க வேண்டும் என்பதற்காக Freshdesk என்ற நிறுவனத்தை உருவாக்கினார். 2017ல் இந்த நிறுவனம் Freshworks நிறுவனமான உருமாற்றம் அடைந்தது.
கிரிஷ் மாத்ருபூதம் தலைமையில் FreshWorks நிறுவனம் சுமார் 11 வருடமாக இயங்கி வரும் நிலையில், இந்நிறுவனம் சென்னை, கலிபோர்னியா ஆகிய இரு இடங்களை Dual Headquaters என்ற அடிப்படையில் தனது தலைமையிடத்தைக் கொண்டு இயங்கி வருகிறது.

SAAS பிரிவில் இயங்கி வரும் FreshWorks நிறுவனம் அமெரிக்காவின் சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்துடன் போட்டிப்போடும் காரணத்தால் உலகளாவிய வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவிலும் தலைமையிடத்தை அமைத்துள்ளது.
ஆனால் இந்நிறுவனத்தின் பெரும் பகுதி டெக் மற்றும் ஆப்ரேஷன்ஸ் ஊழியர்கள் சென்னை பெருங்குடி பகுதியில் இருக்கும் அலுவலகத்தில் இருந்து தான் பணியாற்றி வருகின்றனர்.

FreshWorks நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான கிரிஷ் மாத்ருபூதம் திருச்சியைச் சேர்ந்தவர். இவர் தஞ்சாவூரில் இருக்கும் மிகவும் பிரபலமான சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் 1996ஆம் ஆண்டுப் பி.இ பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் 1998ஆம் ஆண்டு மார்கெட்டிங் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.

கல்லூரி படிப்பை முடித்த கிரிஷ் மாத்ருபூதம் முதல் வேலையாக ஹெச்சிஎல் சிஸ்கோ நிறுவனத்தில் 1.3 வருடம் பணியாற்றினார். ஹெச்சிஎல் நிறுவனத்திற்குப் பின்பு கிரிஷ் மாத்ருபூதம் ஈபோர்ஸ், AdventNet ஆகிய இரு நிறுவனத்தில் 5 வருடம் பணியாற்றினார்.

இதைத் தொடர்ந்து சென்னையின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான நிறுவனமான ZOHO-வில் பல உயர் பதவியில் சுமார் 5 வருடம் பணியாற்றினார்.

ZOHO நிறுவனத்தில் பிராடெக் மேனேஜ்மென்ட் பிரிவின் துணைத் தலைவர் பதவி வரையில் உயர்ந்த கிரிஷ் மாத்ருபூதம் அக்டோபர் 2010ல் FreshWorks நிறுவனத்தை நிறுவினார்.

பல தடைகள் பல தடுமாற்றங்கள் இருந்தாலும் கடுமையான உழைப்பு இன்று மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சி அடைந்து, கை மேல் பலன் கொடுத்துள்ளது.
FreshWorks நிறுவனம் உலகளவில் தற்போது சுமார் 50,000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டு பல்வேறு சேவைகளை அளித்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

இதேபோல் இந்நிறுவனத்தில் சுமார் 4,300 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 500 ஊழியர்கள் தற்போது ஐபிஓ வெளியிட்டுள்ளதன் மூலம் கோடீஸ்வரனாக உயர்ந்துள்ளனர்