கத்தாரில் உளவு பார்த்ததாகக் கூறி சிறைபிடிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் எட்டு பேர் விடுதலையாகி இன்று காலை புதுதில்லி வந்தனர். அவர்கள் தங்கள் விடுதலைக்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
கத்தாரில், தங்கள் நாட்டை உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டி, எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கைது செய்தது. அவர்களை கடந்த 18 மாதங்களாக கத்தார் தடுப்பு காவலில் வைத்திருந்தது.
அவர்களை விடுதலை செய்ய, இந்திய அரசு தீவிர முயற்சி எடுத்தது. இந்திய வெளியுறவுத்துறை கத்தார் நாட்டிடம் நடத்திய பேச்சு வார்த்தையின் வெற்றியாக, எட்டு முன்னாள் கடற்படை வீரர்களையும் கத்தார் விடுதலை செய்தது. இதை அடுத்து, புதுதில்லி வந்த கடற்படை வீரர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவி்த்தனர்.
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கும் விடுதலை கொடுத்தது கத்தார் அரசு! இது, இந்திய அரசின் ராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அழுத்தத்தால் கத்தாரில் பணி புரிந்த 8 இந்தியர்களை சிறையிலடைத்தது கத்தார் அரசு. 8 பேரும் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.
ஹமாஸ் அக்டோபர் 7ம் தேதி, இஸ்ரேலில் வெறியாட்டம் போட்டதை கண்டித்த இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக கத்தார் அரசு இந்த 8 பேருக்கும் அக்.26ல் மரண தண்டனை விதித்தது. இதை அடுத்து கத்தார் அரசுடன் இந்திய வெளியுறவுத்துறை தொடர்ந்து போராடி வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பரில் கத்தார் இளவரசரை துபாயில் சந்தித்தார் பிரதமர் மோடி. அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்து பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து எட்டு பேருக்கான மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில், கத்தாரிலிருந்து வாங்கும் எரிவாயுவை மொசாம்பிக் உள்ளிட்ட இடங்களிலிருந்து வாங்க பாரத அரசு நடவடிக்கை எடுத்தது.. இந்நிலையில், கத்தார் நாடு அந்த எட்டு பேருக்கும் விதிக்கப்பட்ட மரணதண்டனையில் இருந்து விடுவித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது.