ஜம்மு, காஷ்மீரில் பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலராக இருப்பவர் யானா மீர். இங்கிலாந்தில், ஜம்மு காஷ்மீர் கல்வி மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அவருக்கு இங்கிலாந்து எம்.பி. தெரசா வில்லியர்ஸ் பன்முக தன்மைக்கான தூதர் விருது வழங்கி கௌரவித்து இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் மீர் பேசும்போது, நான் மலாலா யூசுப் இல்லை. ஏனெனில், இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள என்னுடைய சொந்த ஊரான காஷ்மீரில் பாதுகாப்பாகவும், சுதந்திரத்துடனும் இருக்கிறேன். நான் என்னுடைய சொந்த நிலத்தில் இருந்து தப்பியோடி விடமாட்டேன். உங்களுடைய நாட்டில் அடைக்கலம் கேட்கவும் மாட்டேன் என்று கூறினார்.
இதன்பின் அவர் பேசியபோது, காஷ்மீர் ஒடுக்கப்பட்டு உள்ளது என கூறியதற்காக மலாலாவை சாடினார். காஷ்மீருக்கு வருகை தருவதில் கவனம் கொள்ளாத, ஒடுக்கப்பட்டு உள்ளது என்ற கதைகளை புனையும் சமூக ஊடகம் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு நான் ஆட்சேபனை தெரிவிக்கிறேன் என்றார். மேலும், மத அடிப்படையில் இந்தியாவை பிரிவினைப்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார் அவர்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலா, அடைக்கலம் தேடி இங்கிலாந்தில் உள்ளார். இங்குள்ள மலாலா யூசுப்சாய் போன்று உயிருக்கு பயந்து லண்டனில் அடைக்கலம் கேட்க வரவில்லை. அவரைப் போன்று நான் இல்லை. காஷ்மீரை விட்டு ஓடிவரவில்லை.காஷ்மீரில் சமூக ஆர்வலர்கள் குறித்து தவறான பிரசாரம் பரப்படுகிறது நான் காஷ்மீரை சேர்ந்தவள், எனது சொந்த மண்ணில் அங்கு மிகவும் பாதுகாப்பாக தான் வாழ்கிறேன் என்ற இவரது பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.