ஸ்டீபன் ஹாகிங்… இந்தப் பெயர் உலக நாடுகள் பலவற்றில் உச்சரிக்கப்பட்ட பெயர்தான். இந்தியாவிலும் படித்த வளரும் தலைமுறையிடம் நன்கு அறிமுகமான பெயராக இருந்தது. அது, இவரின் அறிவியல் துறைக்கான பங்களிப்பினால்!
ஆம். உலகின் மிகச் சிறந்த அறிவியல் மேதைகளில் ஒருவராகத் திகழ்ந்த ஸ்டீபன் ஹாகிங், தனது 76-வது வயதில் இன்று காலமானார். அவரின் மறைவு குறித்த செய்தியை அவரது குடும்பத்தார் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஸ்டீபன் ஹாகிங்கின் மகன்களான லூசி, ராபர்ட், டிம் ஆகியோர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
‘எங்கள் பாசமிகு தந்தை இன்று காலமானார். பெரிய விஞ்ஞானி; சிறப்பான மனிதர். அவரின் பெயரும் புகழும் காலம் கடந்து நிற்கும். அவருக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளனர்.
யார் இந்த ஸ்டீபன் ஹாகிங்?
இன்னும் நூறாண்டுகளில் பூமி மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியானதாக இருக்காது. அப்போது மனித இனம், பூமியை காலி செய்துவிட்டு, மற்ற கிரகங்களை நோக்கி படையெடுக்கும் என்று கூறி உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவர்.
அவர் சொல்கிறார்… ” நம் பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்த பூமியைப் பெருமளவு சேதப்படுத்திவருகிறோம். இந்த பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்றுக் கிரகத்தைத் தேடி மனித இனம் நகரவேண்டிய காலகட்டம் இது. மரணம் என்னை ஒவ்வொரு நொடியும் துரத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் ரசித்து ஈடுபாட்டுடன் மனித இனத்தின் தொடர் பரம்பரைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன்” எனக் கூறியவர் ஸ்டீபன் ஹாகிங்!
1942 ஜனவரி 8ல் பிறந்தவர் ஸ்டீபன் ஹாகிங். அது இரண்டாம் உலகப் போர் நேரம். அதைத் தொடர்ந்து, பள்ளியில் சராசரி மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருந்தார். ஏன்? எதற்கு? எப்படி? ஆகிய கேள்விகள்தான், ஒவ்வொன்றிலும் அவரது ஆர்வத்தைத் தூண்டி, தன்னைச் சுற்றியிருக்கும் பொருள்கள், நிகழ்வுகளின் மீதான பார்வையை பட்டை தீட்டியது. அந்தக் கேள்விகள், அவருக்குள் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தது. விடைகளைத் தேடிய வாழ்க்கையில், சில நேரம் விடைகள் தொட்டுவிடும் தூரத்தில் இருந்தன. அறிவியலார் மட்டுமல்ல, ஆன்மிக உலகியலாரும் தேடிக்கண்டடைய முயன்ற இயற்கை அறிவான, இந்த உலகம் எப்படித் தோன்றியது என்ற பெரும் கேள்வியை அவர் மனம் எண்ணிக் கொண்டே இருந்தது.
பதினெட்டு வயது மாணவனாக கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், அவருக்கு உடலுறுப்புகள் செயலிழத்தலாக Amyotrophic Lateral Sclerosis என்ற நோய் ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவரின் உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின. ஆனால், அவ்வாறு செயலிழக்கும் உறுப்புகளுக்கு ஈடான கருவிகளைத் தானே உருவாக்கி, அந்தக் குறையைப் போக்கிக் கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில், பெரும்பாலான உறுப்புகள் செயலிழந்த நிலையில், ‘ஈக்வலைஸர்’ என்ற கம்ப்யூட்டர் புரோக்ராம் உதவியோடு தனது கன்னத் தசைகளின் அசைவுகள் மூலம், கம்ப்யூட்டர் குரலில் பேசி தன் எண்ணத்தை அடுத்தவருக்குத் தெரியப் படுத்தினார்.
Remembering Stephen Hawking, a renowned physicist and ambassador of science. His theories unlocked a universe of possibilities that we & the world are exploring. May you keep flying like superman in microgravity, as you said to astronauts on @Space_Station in 2014 pic.twitter.com/FeR4fd2zZ5
— NASA (@NASA) March 14, 2018
கல்லூரிக் காலத்தில் உடன் படித்த தோழி, ஜேன் வைல்டை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். 30 வருடங்கள் இவர்கள் ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர், தன்னை கவனித்துக் கொண்ட செவிலியர் எலைனுடன் காதல்கொண்டு, அவரைத் திருமணம் செய்துகொண்டு, பத்தாண்டுகள் அவருடன் வாழ்ந்தார்.
இஸ்ரேல் மீதான எதிர்ப்பு, பாலஸ்தீன ஆதரவு, வியட்நாம் மீதான போர், இராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு என, தன் வீல்சேரில் பயணித்தபடி அரசியல் ரீதியான குரலையும் கொடுத்தவர். ஏலியன், வேற்று கிரகம் என அறிவியல் குரலையும் கொடுத்தவர்.
இவர் வானியல் துறையில், அண்டவியல் குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மிகப் புக பெற்றவை. டைம் மெஷின் (Time Machine), பிளாக் ஹோல் (Black Hole), ஏலியன் (Alien), பிக்பேங் தியரி (Bigbang Theory) என வானியலில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.
இமேஜினரி டைம் (Imaginary Time) என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இவர் எழுதிய “எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்” என்ற புத்தகம், உலக மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
தி யுனிவர்ஸ் இன் எ நட் ஷெல் (The Universe in a nut shell), மை ப்ரீஃப் ஹிஸ்டரி (My Brief History) உட்பட பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். டைம் மிஷின், வானியல்குறித்த இவரின் கோட்பாடுகளைத் தழுவி, ஹாலிவுட்டின் பல படங்கள் எடுக்கப்பட்டன.
தனது வாழ்வு கடினமான நிலையில், தன் தேவைக்கான அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம், பல கண்டுபிடிப்புகளை உலகுக்குத் தந்தவர். அதனால்தான், “வாழ்க்கை கடினம்தான். ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது!” என்று கூறீனார், ஸ்டீபன் ஹாகிங்.
இறுதிவரை சக்கர நாற்காலியில் அமர்ந்து, உலக கண்டுபிடிப்புகள் பலவற்றை ஆக்கித் தந்த சிறந்த அறிவியலாளர் ஸ்டீபன் ஹாகிங் இன்று மறைந்தார்.