சமூகத்தை இணைப்பதற்காகத்தான் பேஸ்புக் என்ற சமூக வலைத்தளத்தை உருவாக்கினோம். ஆனால் எங்கள் எண்ணத்துக்கு மாறாக, அது சமூகத்தை பிளவுபடுத்திவிட்டது என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க். காரணம், பேஸ்புக் பதிவுகளால் பலர் சாதி, மத, அரசியல், குழுச் சண்டைகளை பகிரங்கமாகச் செய்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் பதட்டம். பேஸ்புக் பதிவுகள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதால், அவற்றை பலரும் மிகவும் ‘சீரியஸான’ விஷயமாகவே எடுத்துக் கொள்கின்றனர். பேஸ்புக் பதிவுகளால் வேலைவாய்ப்பு பெற்றவர்களை விட, வேலை இழந்தவர்கள் அதிகம்.
பேஸ்புக்கால் ஏற்படும் இவ்வளவு பிரச்னைகளுக்கும் முக்கியக் காரணமாக இருப்பவை போலி கணக்குகள் மூலம் இயங்கும் சமூகவிரோதிகள்தான் என்பது வெளிப்படை. எனவே, பேஸ்புக்கில் போலி கணக்குகளைக் கண்டறியும் கருவிகளை உருவாக்கி வருவதாக பேஸ்புக் நிறுவுனர் மார்க் சூகர்பெர்க் தீவிரம் காட்டி வருகிறார்.
அண்மையில் அமெரிக்க செனட்டர்களிடம் பேசிய மார்க், சமூக வலைதளங்களை தங்கள் சுயநலத்துக்காகவும், தேவைகளுக்காகவும் பயன்படுத்த முனையும் ரஷ்யர்களிடம் இருந்து மீட்க தாம் தொடர்ந்து போராடி வருவதாகக் கூறியிருந்தார். இதற்குக் காரணம் கேம்பிரிட்ஸ் அனலிடிகா என்ற நிறுவனம், பேஸ்புக்கை காட்டிக் கொடுத்ததுதான்!
பேஸ்புக் கூட்டு சதியில் ஈடுபட்டது வெளியில் தெரிந்தபின்னர், அதன் சந்தை மதிப்பு வெகுவாக சரிந்தது. பங்குச் சந்தையில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, நற்பெயர் எல்லாம் சரிந்த பின்னர், இப்போது பேஸ்புக் அடுத்து முழு உத்வேகத்துடன் நடவடிக்கை எடுப்பதாகக் காட்டி வருகிறது.
கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரம் பூதாகாரமான நிலையில், நடந்த தவறுகளுக்கு தாம் பொறுப்பேற்றுக் கொள்வதாக மார்க் தெரிவித்திருந்தார். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மார்க், அமெரிக்க செனட்டர்களிடம் நேரில் ஆஜராகி பதிலளித்திருக்கிறார். ஆனால், இங்கிலாந்தில் தாம் நேரில் ஆஜராகாமல், நிறுவனத்தின் உயர் அதிகாரியை அனுப்பி வைத்திருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்தது குறித்து விசாரித்து வரும் விசாரணை அதிகாரி முல்லர், பேஸ்புக் நிறுவன ஊழியர்களை விசாரித்தார், ஆனால் என்னிடம் அது குறித்து விசாரிக்கவில்லை என்று கூறியிருந்த மார்க், சிறப்பு விசாரணைக் குழுவுடன் நாங்கள் ஆற்றி வரும் பணியானது மிகவும் ரகசியமானது எனவே இங்கே நான் அதை சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் முல்லர், மூன்று ரஷ்ய நிறுவனங்களுடன் சேர்த்து 13 ரஷ்யர்கள், அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில்தான் தற்போது தங்கள் நிறுவனம் போலி கணக்குகளை கண்டுபிடிக்கும் கருவிகளை உருவாக்குவதாக தெரிவித்திருக்கிறார் மார்க்.
அமெரிக்க செனட்டர்கள், சமூக ஊடகம் எவ்வாறு தீவிரமாக கண்காணிக்கப் படவேண்டும், கண்காணிக்கப் பட வேண்டும் என்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மார்க் சூகர்பர்க் அப்போதைக்கு ஏதோ சொல்லி சமாளித்திருக்கிறார். பின்னர் தன் எதிர்காலத் திட்டங்கள் என பேஸ்புக்கை பாதுகாப்பு மிக்கதாக மாற்றும் தன் திட்டங்களையும் வரித்திருக்கிறார்.
இதே கேள்விகளைத்தான் இந்தியாவும் எழுப்பியிருக்கிறது. அதற்கு பேஸ்புக் நிறுவனம் பதில் அளித்திருக்கிறது. ஆனால் அவற்றில் திருப்தி ஏற்படவில்லை என்று மீண்டும் சில கேள்விகளைக் கேட்டு இந்தியா கடிதம் அனுப்பியிருக்கிறது.
காரணம், காங்கிரஸ் கட்சி தனது அரசியல் நடவடிக்கைகள், தேர்தல் செயல்பாடுகளுக்காக கேம்ப்ரிட்ஜ் அனலிடிகாவின் வாடிக்கையாளராக இருப்பதுதான். அதன் விளைவுகள் இந்தியாவில் பல தளங்களில் எதிரொலித்துக் கொண்டிருப்பதால், மத்திய அரசு இந்த விஷயத்தில் கடும் எச்சரிக்கை உணர்வுடன் அணுகுகிறது.