இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நீடிப்பதாக சபாநாயகர் அங்கீகாரம் அளித்துள்ளார். ராஜபட்ச பிரதமராக பதவியேற்ற நிலையில் சபாநாயகர் அதிரடி அறிவிப்பால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் மேலும் நீடிக்கிறது!
நாடாளுமன்றத்தில் ராஜபட்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணிலின் சிறப்புரிமைகள் தொடரும் என்றும், நாடாளுமன்றம் சுயமாக பிரதமரை தேர்வு செய்யும் வரை ரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிப்பார்
என்றும் சபாநாயகர் கரு ஜெயசூர்யா கூறியுள்ளது அடுத்த அதிரடியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தவிர்க்க நாடாளுமன்றத்தை முடக்கினார் இலங்கை அதிபர் சிறீசேனா! இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா முடக்கி உள்ள நிலையில், அதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக பதவிநீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இலங்கை அதிபர் மைத்றீபால சிறீசேன, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டதுடன், முன்னாள் அதிபர் ராஜபட்சவை பிரதமராக நியமித்து பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். இதனை ஏற்காத ரணில் விக்ரமசிங்க, தான் பிரதமர் பதவியில் நீடிப்பதாகவும் பெரும்பான்மை பலத்துடன் உள்ள தன்னை நீக்க முடியாது என்றும் கூறினார். மேலும், அதிபரின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் தெரிவித்தார்.
வரும் 5ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் தொடங்கவிருந்த நிலையில் நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்ட வேண்டும் என சபாநாயகருக்கு ரணில் கடிதம் அனுப்பினார். நாடாளுமன்றம் அவசரமாகக் கூட்டப்பட்டால் அங்கு அதிபர் மைத்றீபால சிறீசேனவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர விக்கிரமசிங்க திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், நாடாளுமன்றத்தையே கூட்ட விடாமல் செய்ய, நவம்பர் 16ஆம் தேதிவரை நாடாளுமன்றத்தை முடக்கி சிறீசேன உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் சபாநாயகரின் உத்தரவு அதிபரின் நடவடிக்கையை மீறுவதாக அமைந்ததால், இலங்கை அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.




