அதிபர் மாளிகையில் 15 வருட தீபாவளி கொண்டாட்டத்துக்கு ஒரு ‘பிரேக்’: டிரம்புக்கு நேரமில்லையாம்! வாழ்த்து மட்டுமே!

2018ம் வருட செனட் கவுன்சில் தேர்தல்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், அந்த வேலைகளில் அதிபர் மிகவும் பிஸியாக இருந்தால், வருடாந்திர தீபாவளி கொண்டாட்டத்தை அதிபர் மாளிகையில் கொண்டாட இயலவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.


வாஷிங்டன்: கடந்த 15 வருடங்களாக அமெரிக்க அதிபர் மாளிகையில் கொண்டாடப் பட்டு வந்த தீபாவளி விழாவுக்கு இந்த வருடம் ஒரு பிரேக் விழுந்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் இந்த முறை வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டத்துக்கு எந்த வித ஏற்பாடுகளும் செய்யவில்லை. இதற்கு அதிபரின் பரபரப்பான வேலைப் பளு மற்றும் நேரமின்மை காரணமாகக் கூறப் பட்டுள்ளது.

2018ம் வருட செனட் கவுன்சில் தேர்தல்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், அந்த வேலைகளில் அதிபர் மிகவும் பிஸியாக இருந்தால், வருடாந்திர தீபாவளி கொண்டாட்டத்தை அதிபர் மாளிகையில் கொண்டாட இயலவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் இருந்த போது, இந்திய அமெரிக்க நல்லுறவை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்தார் அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ். அவர் அமெரிக்க அதிபராக இருந்த 2003ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கொண்டாடப் பட்டு வந்த தீபாவளி, பராக் ஒபாமாவின் இரு ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்து கொண்டாடப் பட்டது. இம்முறையும் தீபாவளி கொண்டாட்டத்துக்கு சென்ற வருடமே அதிபர் ட்ரம்ப் அனுமதி வழங்கிய போதிலும், இந்த முறை தேர்தல்கள் நடைபெற்றதால், அவரால் அதிபர் மாளிகையில் தீபாவளி கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்ய இயலவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும், தீபாவளி, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமான நட்பை எடுத்துக் காட்டும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்தார். தீபாவளியை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்களின் பங்களிப்பு முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.

வணிகம், தொழில், பொதுவாழ்வு, கல்வி, அறிவியல் ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்க இந்தியர்களின் சாதனைகள் தீபாவளி நேரத்தில் நினைவு கூரத்தக்கது என்றார்.