வெளிநாடுகளில் ஆயிரம் கோடிகளில் பதுக்கல்: ஏப்.23ல் நேரில் ஆஜராக ராஜபட்சவுக்கு உத்தரவு

கொழும்பு: ராஜபட்ச மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பதுக்கி உள்ளதாகவும், துபாயில் மட்டும் ரூ. 6500 கோடி பதுக்கியுள்ளார் என்றும், இந்த விவகாரத்தில் ராஜபட்ச கைதாகக் கூடும் என்றும் இலங்கை இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை இறுதிக்கட்டப் போரின் போது, விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் மற்றும் நகைகள் உள்ளிட்டவற்றை அரசுக் கருவூலத்தில் சேர்க்காமல் ராஜபட் சமற்றும் அவரது குடும்பத்தினர் எடுத்துச் சென்று விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்த அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டார். அப்போது, ரூ.6500 கோடி அளவுக்கு ராஜபட்ச குடும்பத்தினர் ஷெசல்ஸ் மற்றும் சோவியத் யூனியன் கூட்டமைப்பில் இருந்து பிரி ந்த நாடுகளில் பதுக்கியுள்ளதாகாவும், முதலீடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தவும், பதுக்கப்பட்டுள்ள பணத்தை இலங்கைக்கு மீட்டு வரவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வரும் ஏப்.23 , 24ஆம் தேதிகளில் ராஜபட்ச இலங்கையின் ஊழல் தடுப்புப் பிரிவு ஆணைக் குழு முன்பாக ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ராஜபட்ச கைதாவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், ராஜபட்சவின் சகோதாரரும், பாதுகாப்பு துறை முன்னாள் அமைச்சருமான கோத்தபய ராஜபட்சவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் வரும். ஏப். 26, 27ஆம் தேதிகளில் ஊழல் தடுப்புப் பிரிவு ஆணைக் குழு முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜபட்ச அதிபராக இருந்தபோது திஸ்ஸ அத்த நாயகவுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்தும் ராஜபட்சவிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் ராஜபட்ச குடும்பத்தினர் வங்கிகளில் ரகசியமாக பணத்தை பதுக்கியுள்ளனரா என்பது குறித்த விவரங்கள் சர்வதேச ஒழுங்குமுறை ஆணையத்திடம் கேட்கப்பட்டுள்ளன. அவர்கள் விவரங்களை அளிக்கும் பட்சத்தில், ராஜபட்ச மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை எதிர்த்து ராஜபட்ச போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் சூழலில், இப்போது, ராஜபட்ச மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ரூ. 6500 கோடி பதுக்கல் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.