அரசு ரகசியங்களை கசிய விட்டதாக சீன பெண் பத்திரிகையாளருக்கு 7 ஆண்டு சிறை

kaviuசீனாவில் அரசு ரகசியங்களைக் கசியவிட்டதாக மூத்த பெண் பத்திரிகையாளருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மூத்த பெண் பத்திரிகையாளர்களில் ஒருவர் காவ் யூ. இவர் கருத்துச் சுதந்திரம் மற்றும் எழுத்துரிமைக்காகப் போராடியவர். சீனாவில் ஆளும் கட்சியாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீன அரசையும், அரசு அதிகாரிகளையும் விமர்சித்து கட்டுரைகள் பல எழுதியவர். இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த ‘ரகசியக் கோப்பு எண்-9’ என்பதை வெளிநாட்டில் இருந்து இயங்கிவரும் சீன ஊடகத்தின் இணையதளங்களுக்கு இவர் கசியவிட்டார் என்று இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் கோப்பில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்த செயல்திட்டங்கள் தொண்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்து இடம்பெற்றிருந்தது. இந்தக் குற்றச்சாட்டின் பேரில் 2014 ஏப்.24 அன்று இவர் மீது தேச விரோதச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாக இவர் மீது வழக்கு நடைபெற்றது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். இந்நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக காவ் யூ அறிவித்துள்ளார்.