ஹிந்துத்வம் மதமல்ல; வாழ்க்கை முறை: மோடி

modi-canada வான்கூவர்: ஹிந்துத்துவம் என்பது மதமல்ல; அது வாழ்க்கை முறை என்று, கனடாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். வான்கூவர் நகரில் உள்ள சீக்கியர் கோயிலுக்கு வியாழக் கிழமை சென்றிருந்த பிரதமர் மோடியும், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும், அங்கு நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட வாளையும், நீள அங்கியையும் இருவரும் பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர் மோடி பேசுகையில், “கனடாவில் வாழும் சீக்கியர்கள், தங்களின் உழைப்பால் இந்தியாவுக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். தியாகத்துக்கு முன்னுதாரணமாக சீக்கியர்கள் திகழ்வதுபோல, மனிதநேயம் வளர்வதற்கு அனைவரும் பாடுபட வேண்டியது அவசியம்’ என்றார். சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குருநானக்கின் போதனைகளையும், சுதந்திரப் போராட்டத்தில் பகத் சிங் உள்ளிட்ட சீக்கியர்களின் பங்களிப்பைக் குறித்தும் மோடி நினைவுகூர்ந்தார்.

தொடர்ந்து, லட்சுமி நாராயண் கோவிலுக்கு மோடியும், ஸ்டீபன் ஹார்ப்பரும் சென்றனர். அங்கே கூடியிருந்தவர்கள் மத்தியில் மோடி பேசியபோது… “மனிதநேயம் வளர்வதற்கு ஹிந்துத்துவம் மூலமாகப் பாடுபட வேண்டியது அவசியம். ஹிந்துத்துவம், என்பது மதம் அல்ல; அது வாழ்க்கை முறை என்ற அருமையான விளக்கத்தை, இந்திய உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிறது. அந்த விளக்கத்தை நான் நம்புகிறேன். ஹிந்து மதம், அறிவியல் பூர்வமான வழியில் இயற்கையின் நன்மைக்காக செயலாற்றி வருகிறது” என்று கூறினார்.