தென்காசி கோயிலில் மாசித் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்
tenkasi ther - 2026

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் இன்று கால வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது தென்காசி காசி விசுவநாத சுவாமி திருக்கோவில். இங்கே ஆண்டுதோறும் மாசி மகப் பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா பிப்.28ம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

tenkasi ther2 - 2026

வரும் 8–ஆம் தேதி நாளை வரை இந்தத் திருவிழா நடைபெறுகிறது. விழாவின் 9–ஆம் திருநாளான 7–ஆம்தேதி இன்று தேரோட்டம் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் பல்வேறு சமுதாயத்தினரின் சார்பில் மண்டகப்படி பூஜைகள், சுவாமி–அம்பாள் வீதி உலா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள், பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மாள் திருவீதியுலா, ஆன்மிகச் சொற்பொழிவுகள், பரதநாட்டியம், கலைநிகழ்ச்சிகள், இன்னிசைக் கச்சேரி என நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. காலை 6 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் காசி விஸ்வநாதர், உலகம்மன் தனித்தனி தேர்களில் எழுந்தருள, பஞ்ச வாத்தியங்கள் முழங்க தேரோட்டம் தொடங்கியது.

tenkasi ther1 - 2026

தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி, கிழக்குமாசி வீதிகளில் வலம் வந்த சுவாமியின் தேர் காலை 9.30க்கு நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து நான்கு வீதிகளிலும் வலம் வந்த அம்பாள் தேர் 10.45க்கு நிலை சேர்ந்தது.

தேரோட்ட விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர். தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா விழாவில் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன், கோவில் ஆய்வாளர் கலாமணி ஆகியோர் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.