இன்னும் குறையாத கொரோனா! மருத்துவமனையில் இங்கிலாந்து பிரதமர்!

உலகம் பொது தகவல்கள்
pm briten - 2026

கொரோனா வைரஸ் மொத்த உலக நாடுகளையும் ஆட்டுவித்து மனித குலத்தை அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது. ஏழை, பணக்காரன், உலகத் தலைவர், பெரும் பிரபலம் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் இங்கிலாந்தில் இதுவரை 47,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் போன்றவர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு இளவரசர் வைரஸ் தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்து விட்டதாக அவரே அறிவித்தார். இந்த நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகச் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

பரிசோதனைக்காக பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பத்து நாள்கள் ஆன நிலையிலும் வைரஸ் பாசிட்டிவ் என முடிவுகள் வந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் தேசிய சுகாதார ஊழியர்களின் அபரிமிதமான உழைப்புக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், பிற உயிர்களைக் காப்பாற்ற அரசின் ஆலோசனையைப் பின்பற்றும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்” என செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

55 வயதான போரிஸ் ஜான்சனுக்கு கடந்த 10 நாள்களுக்கு முன்பு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது உடல்நிலை அதிக வெப்பநிலையுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற முடிவெடுத்துள்ளார். அவருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் போன்ற அனைவரும் தொடர்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.